வட மத்திய மாகாண நீர்ப்பாசனத் திட்டம்:
1000 சிறு குளங்களினூடாக வடக்கின் 33000 ஹெக்டயர் பயிர்ச் செய்கைக்கு நீர்
வடமத்திய மாகாண நீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் வடக்கின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், 1000 சிறு குளங்கள் மூலம் 33,000 ஹெக்டயார் பயிர்ச்
செய்கைக்கு நீர்ப்பாசனம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஐவன் டி சில்வா தெரிவித்தார்.
நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத்
உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் ஐவன் பெரேரா மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் 10 வருட திட்டத்தின் கீழ் 62 பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் 15 வருடங்களுக்கு நீர்ப்பாசனத் திட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என செயற்பட்ட தலைவர்கள் நாட்டை ஆட்சி செய்தனர். இதனால் 15 வருடங்கள் இத்துறை கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது.
தற்போது விவசாயத்தையும் நீர்ப்பாசனத்தையும் அக்கறையுடன் நோக்குகின்ற தலைமைத்துவம் இந்த நாட்டில் உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்திலேயே பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் தெதுறு ஓயா திட்டம் எதிர்வரும் ஒக்டோபரில் நிறைவுபெறும். அத்துடன் மொரகஹகந்த உட்பட மேலும் பல திட்டங்கள் 2016ல் நிறைவு செய்யப்படவுள்ளன. அனைத்துப் பாரிய திட்டங்களும் 15 வருடத்திற்குள் முழுமையாக நிறைவு பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.