96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 91-96 வரையான ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக 40 வழக்குகள் போட்டது. ""எல்லா வழக்கிலும் நான் குற்றமற்றவள் என என்னால் நிரூபித்துவிட முடியும். ஆனால் இந்த சொத்துக்குவிப்பு வழக்குதான்...'' என தனது வழக்கறிஞர்களிடம் சந்தேகமாக அன்றே சொன்ன ஜெ., கடந்த 18 வருடங்களாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார்.
ஆனால் கடந்த 17-ந் தேதி (செவ்வாய்) சுப்ரீம்கோர்ட்டில் நீதியரசர் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்த வாதங்கள்தான் "ஜெயலலிதாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.
ஜெ. முதலமைச்சராக இருந்த 91-96ம் ஆண்டுவரை ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்குபேரை இயக்குநர்களாக கொண்டு சுமார் 32 கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜெ. வீடான 36, போயஸ் கார்டன் என்ற முகவரியில் இயங்கிய இந்த கம்பெனிகளில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியது. ஒரு கம்பெனியின் பெயரில் போடப்படும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றொரு கம்பெனியின் பெயருக்கு மாற்றப்படும் என நடந்த இந்தப் பணப்புழக்கத்திற்குக் காரணம் இரண்டே நபர்கள். ஒருவர் பெயர் ஜெயராமன். இன்னொரு வர் ராஜன். இருவருமே போயஸ் கார்டன் வேலையாட்கள். இந்த இருவரும்தான் இந்த 32 கம்பெனிகளையும் பதிவு செய்தவர்கள். இவர்கள் கையெழுத் தில்தான் 32 கம்பெனிகளிலும் திடீர் திடீரென்று லட்சக்கணக் கில் பணப் பரி மாற்றம் நடக்கும்.
இந்த 32 கம்பெனி களிலும் புழங்கியது ஜெ. சட்ட விரோதமாக சம்பாதித்த பணம்தான் என்று சொத்துக்குவிப்பு வழக்கை புலன் விசாரணை செய்த நல்லம்ம நாயுடு, வங்கி ஆவணங்களை ஆதாரமாக வைத்து குற்றம் சுமத்தினார். அதை நிரூபிக்க ஜெயராமனையே சாட்சியாக்கி "ஆமாம் இதெல்லாம் ஜெ.வின் பணம்தான்' என சொல்ல வைத்தார். இந்த வழக்கு தான் பல தடைகளை கண்டு இறுதி விசா ரணைக்கே வராமல் இருந்தது.
கடைசியாக தடை தொடர்பான விவாதம் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 7-ம் தேதி நீதியரசர்கள் தெஹர், நாகப்பன் அடங்கிய அமர்வின் முன் வந்தது. ஜெ.வுக்கு எதிராக ஆஜராகிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கறிஞர் இந்த வழக்கிற்கு மூன்று வாரம் தடை வேண்டும் என வாதாடினார். இதைக்கேட்டு கோபமடைந்த நீதியரசர் தெஹர், ""குற்றவாளி மூன்றுவார தடை கேட்கிறார். அவருக்கு எதிராக வாதாட வேண் டிய போலீசின் வழக்கறிஞரும் மூன்று வாரம் தடை கேட்கிறார்.
போலீசும் குற்றவாளி யும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டீர்களா?'' என பொட்டில் அடித்தாற் போல் கேள்வி கேட்க, வழக்கின் போக்கே மாறியது என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட்டில் நடந்ததைப் பார்த்த வழக்கறிஞர்கள்.
இந்த வழக்கில் பேராசிரியர் அன்பழக னுக்காக வாதாடிய சீனியர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நம்மிடம், ""16-ந் தேதி இந்த வழக்கில் நாங்கள் தலையிட்டோம். நாங்கள் தாக்கல் செய்த மனுவில் எப்படியெல்லாம் ஜெ., மனுவுக்கு மேல் மனு போட்டு வழக்கை தாமதப் படுத்தினார் என விளக்கியிருந்தோம். அதைப் படித்துப் பார்த்த நீதியரசர் விக்ரம்ஜித் சென், "நான் கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்தேன். வழக்கிற்காக ஆச் சார்யலுவை சிறப்பு வழக் கறிஞராக நியமித்தேன். நான் இந்த வழக்கை விசாரிக்க உங்களுக்கு தடையேதும் இல்லையா?' என ஜெ.வின் வழக்கறிஞர் சேகர் நெப்டேவை பார்த்துக் கேட்க, அவர் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என சொல்லிவிட... 17-ந் தேதி இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
கடந்தமுறை ஜெ.வுடன் சேர்ந்து வழக்கிற்கு தடை கேட்டதால் நீதிபதி தெஹரின் கண்டனத்துக் குள்ளான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங் களை வைத்துவிடுமோ என்று தன் நிலையை மாற்றிக் கொண்டது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா முறையாக விசாரணை நடத்தி வருகிறார். எனவே ஜெ., சசி கேட்பது போல தடை எதுவும் விதிக்கக்கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை வாதாட, ஜெ.வின் மனு டிஸ்மிஸ் என நீதியரசர் விக்ரம்ஜித் சென் சொன்னார். அவரிடம் ஜெ.வின் வழக்கறிஞர் தடையை நீட்டித்துத் தாருங்கள் என கோரிக்கை வைத்தார். முடியாது, எந்தத் தடையும் இல்லை என தனது தீர்ப்பைத் தெளிவாகச் சொன்னார் நீதிபதி விக்ரம்ஜித் சென்'' என்கிறார் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.
""இந்த வழக்கு பற்றிய எல்லா விபரமும் தெரிந்த நீதியரசர் விக்ரம்ஜித் சென்னிடம் வழக்கு வருகிறது'' என்றவுடன் ஜெ. டென்ஷனானார். 16-ந் தேதி மாலை விக்ரம்ஜித் சென் நான் இந்த வழக்கில் இருந்து விலகவா? என கேட்டதற்கு, ஜெ.வின் வழக்கறிஞர் நெப்டே வேண்டாம் என சொன்ன தகவலைக் கேட்டு உடைந்து போனார் என்கிறது கார்டன் வட்டாரங்கள். உடனே 21-ந் தேதி நடக்க விருந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை கேன்சல் செய்த ஜெ. புதிய ராஜ்யசபா உறுப்பினரான வழக் கறிஞர் நவநீதகிருஷ்ணன், ஜெ.வின் வழக்கறிஞரான குமார், சசி, இளவரசி, சுதாகரன் வழக்கறிஞர் களோடு போயஸ் கார்டனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தடைநீக்கம் என்ற தீர்ப்பால் ஜெ. தரப்பு அப்செட்டானபோது, தி.மு.க. தரப்பு மகிழ்ச்சியடைந்தது. "இது எங்களுக்குப் பெரிய அடிதான். இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்' என்றார் அ.தி.மு.க.வின் சீனியர் வழக்கறிஞர் ஒருவர். "ஆனால் எங்கள் முகாமில் முன்பிருந்ததைவிட ஜெயிப்போம் என்கிற நம்பிக்கை பெருமளவு குறைந்துவிட்டது' என்கிறார் சீனியர் வழக்கறிஞரின் உதவியாளர்.
அந்த கம்பெனிகளின் மனுக்களை டிஸ்மிஸ் செய்த டிகுன்ஹா, வழக்கை தாமதப்படுத்தியதற்காக ஒவ்வொரு கம்பெனிக்கும் 50,000 ரூபாய் அபராதம் விதித்தார். சுப்ரீம் கோர்ட்டில் தடை இல்லை என்ற உத்தரவு வந்ததால், கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு போய் இதே கம்பெனிகளின் விவகாரத்தைச் சொல்லி தடை கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த நீதிபதி சத்யநாராயணா "நீங்கள் ஆடும் நாடகத்தில் நாங்களும் சேர்ந்து நடிக்க முடியாது என நிராகரித்தார்'' என கர்நாடக கோர்ட்டுகளில் நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறார்.
19-ந் தேதி இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா உத்தரவிட, ஜெ. தரப்பு பகல் 12:30 மணிக்கு தனது இறுதி வாதத்தை தொடங்கியது. இது சாதாரண வாதமல்ல. ஜெ. நேரடியாக மேற்பார்வையிட்டு ப்ரூப் பார்த்து திருத்திக் கொடுத்த வாதம் என ஜெ.வின் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.
""இந்த வழக்கு தி.மு.க. அரசால் பழிவாங்கும் நோக்கோடு புனையப்பட்ட வழக்கு. இந்த வழக்கை புலனாய்வு செய்த லத்திகா சரணுக்கு டி.ஜி.பி. பதவி கொடுத்து தி.மு.க. அரசு கௌரவப்படுத்தியது. விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடு தி.மு.க. அரசு கொடுத்த பொய்யான ஆதாரங்களை வைத்து பொய் வழக்குப் போட்டுள்ளார். இது அரசியல் ரீதியாக பழிவாங்கப் போடப்பட்ட வழக்கு'' என தனது வாதத்தைத் தொடங்கியுள்ளார்.
""கர்நாடக நீதிமன்ற நடைமுறைகளின் படி இறுதி வாதம் முடிந்ததும் அடுத்த 14 நாட்களுக்குள் நீதிபதி தீர்ப்பை கட்டாயம் சொல்லிவிட வேண்டும்'' என்கிறார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.
"தி.மு.க. பொய் வழக்கு போட்டிருக்கிறது. அதை எங்களது இறுதி வாதம் நிரூபிக்கும்' என்கிறார்கள் ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள். ""வெறும் 27 ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ. 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார். இந்த 66 கோடி ரூபாயும் சட்டப் பூர்வமாக சேர்த்த சொத்தல்ல. இதற்கு குறைந்தபட்சம் வரு மான வரிகூட கட்டவில்லை. இதைத் தெளிவாக நாங்கள் சமர்ப்பித்த 440 பக்கம் எழுத்து பூர்வமான வாதத்தில் நிரூபித் துள்ளோம். எப்படி கம்பெனி களை வைத்துக் கண்ணாமூச்சி ஆடிய ஜெ., சுப்ரீம் கோர்ட் வரை போய் தோத்துப் போனாரோ அதேபோல் இந்த வழக்கில் தோற்றுப்போவார்'' என்கிறார்கள். தி.மு.க. தரப்பு வழக்கறிஞர்கள்.
""குற்றவாளி, போலீஸ் என பேதம் பிரித்துப் பார்க்க நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா விரும்ப மாட்டார். இரண்டு தரப்பிலும் உள்ள நியாயத்தை ஆராய்ந்து தான் தீர்ப்பளிப்பார்'' என நீதிபதியைப் பற்றிச் சொல்லும் கோர்ட் ஊழியர்கள், "இந்த வழக்கு ஜூலைக்குள் முடி வடைந்துவிடும்' என வழக்கு விபரங்களைச் சொல்கிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெ.வின் எதிர்காலத்தை இந்த வழக்கின் தீர்ப்புதான் தீர்மானிக் கப்போகிறது. தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க.வின் எதிர்காலம், இந்த வழக்கில் பெறப்போகும் தீர்ப்பை பொறுத்தே அமையும் என சட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு விவாதிக்கும் அரசியல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.