''தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா?''
கொந்தளிக்கும் குஷ்பு!
விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல
பெண்கள்
இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த
வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து
மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை
ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா
ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம்
ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில்
ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து
சென்று அந்த நடிகையை மீட்டு வந்தனர். இடைத் தரகராகச் செயல்பட்ட துணை
இயக்குநர் பாலுவையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதையடுத்து,
மீட்கப்பட்ட நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நடிகையின் பெயர் மெள்ள மெள்ள கசிந்து, அவர் ஸ்வேதா பாசு
என்று தெரியவந்தது. அவர் அந்தக் குற்றத்தை மறைக்கவில்லை. மாறாக ஒப்புக்
கொண்டார்.
''எனக்கு அண்மைக்காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர
இல்லை. இதனால் செலவுக்குப் பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். எனவே,
பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான்
விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னால்
இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை. சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள்
பொதுவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது. பிரபல நடிகைகளில் பலர் இதில்
ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இதில் சிக்கித்
தவிக்கிறார்கள்'' என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஸ்வேதா பாசு
சொன்னதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. இது செய்தியாக வெளியில் வந்ததும்
பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக இப்படி சிக்கிக் கொள்பவர்கள், 'நான் என்
காதலனுடன் இருந்தேன், என்னோடு இருந்தவர் என்னுடைய ஃபேமிலி ஃபிரெண்ட்’
என்றுதான் சொல்வார்கள். ஆனால், ஸ்வேதா பாசு, தன்னுடைய வாழ்க்கை நிலைமையை
ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீஸார் கைது செய்ததாகத் தகவல்
வெளியாகியது.
இவரையும் போலீஸார் மீட்டார்கள். இதுமேலும் சர்ச்சையைக் கிளப்பியது.
இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து
போன்றோரும் போலீஸாரிடம் சிக்கினர். நடிகைகள் என்பதற்காக மட்டும் இந்த
செய்திக்கு முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. பொதுவாகவே விபசார வழக்குகளில்
சம்பந்தப்பட்ட பெண்கள், கைது செய்யப்படுவதாக காட்டப்படுகிறார்கள்.
அவர்களோடு இருந்த ஆண் யார் என்பது தெரிய வருவதே இல்லை. அவர்களை போலீஸ்
லாகவமாக மறைத்துவிடுகிறது!
விபசார வழக்கில் மீட்கப்பட்ட நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு தனது கொந்தளிப்பைக் காட்டியிருந்தார் நடிகை குஷ்பூ.
இதுகுறித்து நம்மிடம் அவர் பேசியபோது, ''விபசார
சம்பந்தமான விவகாரம் என்றால் முதலில் பெண்களை மட்டும்தான்
மையப்படுத்துகிறார்கள். பாலியல் தொழிலில் ஆண்களும்தானே சம்பந்தப்பட்டு
இருக்கிறார்கள்? ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும்
மறைக்கப்படுகின்றன. விபசாரத்தில் ஈடுபடும் பெண்களைக் கைது செய்யும்போது
அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகிறது. ஆனால்,
அந்தப் பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது. ஏன் இந்த
பாரபட்சம்? அந்த ஆணுக்கும் இந்தக் குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே?
பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்? பெண்களை கைது
செய்யும்போது புகைப்படங்களை எடுக்கப் போட்டி போடுகிறார்கள். இது எல்லாம்
நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களைப் புகைப்படம் எடுத்துப் போட
வேண்டியதுதானே? அதுவும் நடிகைகளாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. என்ன
நடந்தது... என விசாரணை செய்யாமலேயே புகைப்படத்துடன் முதல் பக்கத்தில்
வெளியிடுகிறார்கள். இதுதான் தர்மமா?
இப்போது விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர்
திவ்யாஸ்ரீ என்கிறார்கள். இதையே இன்னும் முறையாக விசாரணை நடத்தவில்லை.
ஆனால், அதற்குள் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீ திவ்யா
புகைப்படத்தைப் போட்டு என்னென்னவோ எழுதுகிறார்கள். பாவம் அந்தப் பெண்ணுக்கு
22 வயதுதான்
ஆகிறது.
அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குகிறார்கள். முழுமையாகத்
தெரியாமல் ஏன் ஒரு தவறான செய்தியை பரப்ப வேண்டும்? பாலியல் தொழில்
தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும்
ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல்
தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ்
தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம்
கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட
வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப்
பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை
வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால்
இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண்
என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' என்று
கொந்தளித்தார்.
'சட்டம் என்ன சொல்கிறது. ஏன் ஆண்களுக்கு இதில் தண்டனை வழங்கப்படுவதில்லை’ என வழக்கறிஞர் ஸ்ரீதரை கேட்டோம்.
''இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விபசார தடுப்பு
சட்டம் சற்று சிக்கலானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விருப்பத்துடன் ஒரு
ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது. அதன்படி பார்த்தால்
இந்தியாவில் நடைபெறுவதை விபசாரம் என்றோ, தண்டனைக்குரிய குற்றம் என்றோ
வரையறுக்க முடியாது. ஆனால், விடுதி வைத்து நடத்தி அதில் பணம் சம்பாதிக்கும்
நோக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது
குற்றம். விபசார வழக்கில் கைது என்பதே கிடையாது. பத்திரிகைகள்தான் இப்படி
செய்திகள் வெளியிடுகின்றன. 'விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீட்பு’
என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில்
ஈடுபடுத்துவது, விடுதிகள் நடத்துவதுதான் குற்றம்'' என்றார் சுருக்கமாக.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!