சென்னையில் வித்யா... கோவையில் தனலட்சுமி... சீர்காழியில் சுபா... காரைக்காலில் வினோதினி... இந்த வரிசையில்.. தென் மாவட்டத்தில் அதுவும் மதுரை - திருமங்கலத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ள கல்லூரி மாணவிகளான மீனாவும், அங்காள ஈஸ்வரியும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
வெறித்தனமான ஆசிட் வீச்சு!
மதுரை மாவட்டம் -பேரையூரை அடுத்துள்ள சின்ன பூலாம்பட்டியைச் சேர்ந்த மீனாவும் அங்காள ஈஸ்வரியும் திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். கடந்த 12-ஆம் தேதி வகுப்பு முடிந்து திருமங்கலம் பேருந்து நிலையத்துக்கு சக மாணவிகளுடன் இவர்கள் வந்து கொண்டிருந்த போது, குறுகலான சந்து ஒன்றில் மீனாவை நோக்கி முன்னேறினான் ஒருவன். கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கையில் வைத்திருந்த பாட்டிலில் உள்ள ஆசிட்டை அவள் முகத்தில் வீசினான். மீனா அலறித்துடிக்க... மீதமிருந்த ஆசிட்டால் மீண்டும் அடித்தான். உடன் வந்த அங்காள ஈஸ்வரி கூச்சலிட்டுத் தடுக்க... எஞ்சியிருந்த ஆசிட் முழுவதையும் இவள் மீது வீசிவிட்டு, அடுத்த சந்தில் தயார் நிலையில் இருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டான்.
மண்டை காயும் காக்கிகள்!
ஐந்து தனிப்படை போலீசாரை முடுக்கி விட்டும், ஆசிட் பாதிப்புக்கு ஆளான மாணவியர் இருவரின் மனம் நோகாமல் கேட்டும், சந்தேகப்படும் நபர்களை இழுத்து வந்து விசாரித்தும் சரியான துப்பு கிடைக்காத நிலையில், "ஆசிட் வீசிய நபர் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப் படும்'’என்று மண்டை காய்ந்து போய் அறிவித்திருக்கிறது காவல்துறை. "வழக்கை இழுத்தடிக்காதே! ஆசிட் ஊற்றிய குற்றவாளி யை கைது செய்!'’என்று அக்கல்லூரியின் மாணவர் களும் மாதர் சங்கத்தினரும் திருமங்கலம் தேவர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபடும் அளவுக்கு இந்த விவகாரம் தீவிரம் அடைந்திருக்கிறது.
நாம் களமிறங்கினோம். சின்ன பூலாம்பட்டி, பெரிய பூலாம்பட்டி, பெரிய வாகைக்குளம், எழுமலை என சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று தகவல்களை திரட்டினோம்.
மீனாவின் உறவுகளில் ஒருவர் ""பொணந்தின்னி காடுன்னு சொல்லுங்க. அந்த பாயை உங்களுக்கு தெரியுமான்னு கேளுங்க.. மீனாவோட அம்மா முருகேஸ்வரி திணறிப் போயிருவா''’என்று பூடகமாக ஒரு விஷயத்தைச் சொன்னார். ""இது பெரியவர்கள் விவகாரம்.. மீனா விஷயத்துக்கு வாங்க..''’ என்றவுடன் ""பிரியாகிட்ட போயி கேளுங்க''’என்றார்.
மீனாவுடன் படிக்கும் ராகபிரியா சம்பவத்தை நேரில் பார்த்தவள். அவளது உறவினரும் கூட. ‘மீனா யாரையாவது காதலித்தாளா?’ என்று துருவினோம். ""இல்லீங்க சார்..''’என்று முதலில் மறுத்தாள். ""உண் மையை சொல்லும்மா.. லவ்வரோட அவ சினிமாவுக்கு போனது உனக்கு தெரியும்தானே? உன் ஃப்ரன்ட் ஸெல்லாம் சொல்லிட்டாங்க... நீதான் மறைக்கிற... அதான்... திருமங்கலம் பானு தியேட்டருக்கு...?''’என்று நாம் கேட்க, அவசரமாக இடைமறித்த ராகபிரியா “""அவ போனது மீனாட்சி தியேட்டர். காலேஜுக்கு கட் அடிச் சிட்டுப் போனா. ரெண்டு பேரும் "ஜிகர்தண்டா' பார்த் தாங்க. அவன் பேரு கார்த்திக்...''’என்று கொட்டினாள்.
விசாரணைக்காக கேரளாவிலிருந்து வந்திருந்த மீனாவின் காதலன் கார்த்திக்கை பேரையூரில் சந்தித்தோம். ""சம்பவம் நடக்கிறதுக்கு மொதநாள் கூட செல்போன்ல அவகிட்ட அரை மணி நேரம் பேசினேன். இப்படி ஒரு எதிரி இருக்கிறத எங்கிட்ட அவ சொல்லவே இல்ல. ஸ்கூல்ல படிக்கிறப்பவே நாங்க ரெண்டு பேரும் லவர்ஸ். எங்க காதல் புனிதமானது. குனிஞ்ச தலை நிமிர மாட்டா. அவளைப் போயி இப்படிப் பண் ணிட்டானே... அவன் யாருன்னு எனக்குத் தெரியாது''’என்றான் பரிதாபமாக.
வாய் திறக்காத மீனா!
ஆசிட் அடித்த கொடூரன் யார்?
குற்றவாளி தப்பிச் சென்றபோது விவர மான ஒரு மாணவி அந்த பைக் நம்பரை நோட் செய்திருக்கிறாள். விசாரணையின்போது இன் னொரு மாணவி இதை போலீஸாரிடம் சொல்லி விட்டாள். "அஞ்சாத சிங்கம்'’என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த பல்ஸர் பைக் நம்பர் பச 58 ஆவ 5026 என்பது தெரிந்தவுடன், பெரிய வாகைக்குளம் சென்று சுரேஷ்குமார் என்பவனை அள்ளிக்கொண்டு வந்தது போலீஸ். அவனோ பசுமலை ஓட்டுனர் பயிற்சி மையத்தில் படிக்கும் சிவகுமார் என்பவனைக் கை காட்டுகிறான். மேலும் சதீஷ்குமார், சக்திவேல் என தங்களுடன் இன்னொரு பைக்கில் வந்தவர்கள் குறித்தும் சொல்கிறான்.
ரேஷன்கடை ஊழியரான சிவகுமாரின் அக்கா கணவரிடமும், சிவகுமாரின் நட்பு வட்டத்தை நன்கறிந்த வாகைக்குளத்தைச் சேர்ந்த டிராபிக் போலீஸ்காரர் சரவணனிடமும் ‘""வேலையை விட்டு தூக்கிவிடுவோம்''’ என்று போலீஸ் டீம் எச்சரிக்க.. சிவகுமாரால் தப்ப முடியவில்லை. சதீஷ்குமாரையும், சக்திவேலை யும் போலீஸ் டீம் வளைத்துப் பிடிக்கிறது.
ஆசிட் வீசும் அளவுக்குஆத்திரம் ஏன்?
கேரளாவிலிருந்து வந்த காதலன் கார்த்திக்குடன் ஜிகர்தண்டா சினிமா வுக்கு மீனா போனது ஒரு மாணவி மூலமாக சிவகுமாருக்குத் தெரிந்து விடுகிறது. நான் காத லிக்கும் (ஒரு தலையா கவோ இரு தலையாக வோ) ஒருத்தி இன் னொருவனுடன் சினி மாவுக்குச் செல்வதா? தியேட்டரில் என்ன வெல்லாம் நடந்திருக் கும்? என்று புலம்பிய வன், 12-ஆம் தேதி நண்பன் ஒருவன் வீட்டு விஷேசத்துக்கு மது அருந்திவிட்டுச் சென்றிருக்கிறான். தொடர்ந்து மது அருந் தியபடியே ""அவளோட அழகான முகம்தானே என்னை பைத்தியமாக்கி சுத்த வச்சுச்சு.. அந்த முகத்தை.. அந்த முகத்தை..?'' என்று’ மீனா குறித்து பிதற்றியிருக்கிறான். பிறகுதான், ஆசிட் வீச்சு நடந்திருக்கிறது என்பதை விசாரணையின்போது தெரிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள் காக்கிகள் தரப்பில்.
சாதிக் கலவரம் வெடிக்காமல் இருக்க..!
மீனா, அங்காள ஈஸ்வரி மற்றும் வழக்கின் விசாரணை வளையத்துக்குள் சிக்கிய அனைவருமே முக்குலத்தோர் சமுதாயத்தவர்கள். போலீஸ் தரப்பிலும் முக்குலத்தோர் லாபி அதிகமாகவே இருக்கிறது. ஆசிட் வீசியவன் வேறொரு சாதியைச் சேர்ந்தவன் என்றும் அவன் கையில் ஆசிட் ஏற்படுத்திய காயம் இருக்கிறது என்றும் அவனும் சிவகுமாரைப் போலவே மீனா மீது ஆத்திரம் கொண்டிருந்தான் என்றும் சிவகுமார் நினைத்ததை அவன் முடித்து விட்டான் என்றும் விசாரணையின் போக்கு இன் னொரு திசையில் பயணித்திருக்கிறது. விஷயம் லீக்கானால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகும் என்று உண்மையை மறைக்கின்ற வேலைகள் ஒருபுறம் நடந்து வருகின்றனவாம். இதையறிந்த மாவட்ட உயர் காவல் அதிகாரி ""நெறய விஷயத்தை என்கிட்ட நீங்க ரிப்போர்ட் பண்ணுறது இல்ல.. உங்களையெல்லாம் கூண்டோடு மாற்றுவேன்..'' என்று ஒரு கட்டத்தில் சீறினாராம்.
ஆசிட் அடித்த காயம் இல்லை!
சிவகுமாரோ? வேறு யாரோ? மீனா கண் விழித்து இந்த நால்வரில் ஒருவனைக் கை காட்டினால்தானே கைது நடவடிக்கை எடுக்க முடியும்?
""தூத்துக்குடி, கோவை என தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகமுதல்வர் செல்லும் போது, ஆசிட் வீசியவன் மீது கைது நடவடிக்கை எடுத்தால் அதுதான் பரபரப்பாக பேசப்படும். அத னால்தான், திட்டமிட்டே நடவடிக்கை எடுக்காமல் தாமதப் படுத்துகிறது காவல்துறை''’ என்றொரு குற்றச்சாட்டு சாலை மறியல் செய்த இடத்தில் கிளம்ப.. நாம் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. சியாமளாதேவியிடம் பேசினோம்.
""குற்றவாளி யார் என்பதை மீனாதான் உறுதிப்படுத்த முடியும். வீரப்பனை 30 வருஷம் கழிச்சுத்தானே பிடிக்க முடிஞ்சது? சந்திரலேகா ஐ.ஏ.எஸ். முகத்தில் ஆசிட் வீசிய சுர்லாவை மூணு மாசம் கழிச்சுத்தானே பிடிக்க முடிஞ்சது? இதிலெல்லாம் அவசரம் காட்ட முடியாது. விசாரணை முழுமை பெற்று உண்மைக் குற்றவாளி யார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு கால தாமதம் ஆகத்தான் செய்யும்''’என்றார்.
பெண்கள் மீதான ஆசிட் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எங்கும் பரவியபடியே இருக்கும் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைக்கு எப்போது முடிவுகட்டப் போகிறோம்?
-முகில் & ராம்கி