ஊழல் வழக்கில் ஜெ. பெற்றுள்ள 4 வருட சிறைத்தண்டனையால் முதல்வர் பதவியை இழந்திருப்பதுடன், ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற
தகுதியையும் இழந்திருக்கிறார். 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது இத்தொகுதி. ஜெ.வின் மேல்முறையீட்டு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிவாசிகளின் மனநிலை என்ன என்பதை அறிய களமிறங்கினோம்.
ஸ்ரீரங்கம்தான் தனது பூர்வீகம் எனக் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் இங்கு போட்டியிட்டபோது ஜெ. பெருமையோடு பிரச்சாரம் செய்தார். ""இங்கு வரும்போது என்னுடைய சொந்த வீட்டிற்கு வருவது போல உணர்கிறேன். நான் உங்களில் ஒருத்தியாக இனி இங்கேயே வாழப்போகிறேன்'' என அவர் சொன்னது மக்களைக் கவர்ந்தது. சுமார் 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்தனர். முதல்வரான ஜெ., தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கானத் திட்டங்களை அறிவித்தார். திட்டப்பணிகளைக் கவனிப்பதில் அமைச்சர்கள், அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தினர். சென்னையில் முக்கிய நிகழ்வுகளில்கூட வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பங்கேற்கும் ஜெ., கடந்த மூன்றரை ஆண்டுகளில் 5 முறை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு நேரடி விசிட் அடித்துள்ளார். தற்போது ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, எம்.எல்.ஏ பதவியை ஜெ. இழந்துள்ள நிலையில்தான் சர்வே பேப்பர்களுடன் நாம் களத்தில் இறங்கினோம்.
ஸ்ரீரங்கம் கோயில் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் விசாலாட்சி அம்மாள் ""இந்தக் கோவிலை சுத்தப்படுத்தி, பழமை மாறாமல் பாதுகாத்து கும்பாபிஷேகம் பண்ணப்போறாங்க. இதை தெய்வத்துக்கு அந்தம்மா செய்த சேவையாக நினைக்கிறோம். அதற்காகவே அவருக்கு நாங்க வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கிறோம். கும்பாபிஷேகத்துக்கு அவரால் வர முடியாதோன்னு கவலையா இருக்குது.''
ஸ்ரீரங்கத்தில் கடை வைத்திருக்கும் விஸ்வநாதன் ""இந்தியாவிலே முக்கியமான கோயில் இது. இந்தியாவே கவனித்த முதலமைச்சராக இருந்த அந்தம்மாவோட தொகுதி இது. பல பக்தர்கள் இங்கே வருவாங்க. 5 நிமிடத் துக்கு ஒரு பஸ் வரும். அப்படியிருந்தும் ஒரு நல்ல பஸ் ஸ்டாண்டு கிடையாது. இதோ வருது. அதோ வருதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.''
மணப்பாறை மொணப்பட்டி ஜெயச்சந்திரன் ""நாங்கதான் ஸ்ரீரங்கம் தொகுதியோட கடைக்கோடி வாக்காளர்கள். தாலுகா ஆபீஸ், டி.ஆர்.ஓ. ஆபீஸ் போய் வேலையை முடிக்கணும்னா ஒருநாள் முழுக்க ஆயிடுது. ரொம்ப வெறுத்துப்போயிடுறோம்.'' கல்லூரி மாணவர் கமலக்கண்ணன் ""எனக்கு யார் நல்லது செய்றாங்களோ அவங்களுக்குத்தான் ஓட்டு. லேப்-டாப் கொடுத்ததற்காகவே அந்தம்மாவுக்குத்தான் ஓட்டுப்போடுவேன்.''
கோவில் திருப்பணியில் ஈடுபட்டுள்ள சுப்ரமணியன் ""இந்தக் கோயிலில் ஒரு வேளைக்கு 2 ஆயிரத்து 500 பேர் சாப்பிடுறாங்க. சாப்பாட்டுக்கு இங்கே பஞ்சமேயில்லை. இது ஒண்ணு போதாதா அந்தம்மாவுக்கு ஓட்டுப் போடுறதுக்கு.''
நகரப் பகுதியைச் சேர்ந்த முரளிராஜன் ""ஸ்ரீரங்கத்தைச் சுற்றி விவசாயக் கல்லூரி, சட்டக் கல்லூரி, காகிதத் தொழிற்சாலை, பொறியியல் கல்லூரின்னு இந்தம்மா பல திட்டங்களை அறிவிச்சிருக்காங்க. இதெல்லாம் நல்ல திட்டங்கள்தான்