தன்னை ஒருதலையாகக் காதலித்த ஒரு கயவனால், ‘தனக்குக் கிடைக்காத காதலியை யாருக்கும் கிடைக்கவிடக் கூடாது என்பதுதான் உண்மையான காதல்’
என்று நினைத்துவந்த ஒரு மடையனால் வாழ்க்கை சூனியமாக்கப்பட்ட லட்சுமிக்கு, அப்போதிருந்தே ஆண்கள் என்றாலே வெறுப்பு; வாழ்க்கையின் மீது ஒரு கசப்பு.
ஆனால், நிலைமை இப்போது தலைகீழ். ‘‘என் வாழ்க்கையில் நான் இப்போது நல்ல நல்ல ஆண்களைச் சந்தித்து வருகிறேன். அவர்களால்தான் உலகம் இப்போது செழித்துக் கொண்டிருக்கிறது’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார்.
அமிலத் தாக்குதலுக்குப் பிறகு திக்குத் தெரியாமல் இருந்த லட்சுமிக்குக் காதல் துணையாக வந்தார் சமூக ஆர்வலர் தீக்ஷித். ‘‘உன் சம்மதம் வரும் வரை எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருப்பேன்’’ என்று அழகாக காதலை வெளிப்படுத்திய தீக்ஷித்தின் ஆண்மைதான் லட்சுமிக்கு இப்போது பக்கபலம்.
இப்போது 24 வயதாகும் லட்சுமிக்கு, ‘‘உனக்குப் பழைய தோற்றம் வரும் வரை நீ என்னுடைய ஆயுர்வேத மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும்’’ என்று லேட்டஸ்ட்டாக அன்புக் கட்டளை இட்டிருப்பவர், ‘மம்மூக்கா’ என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி.
மலப்புரத்தில் இருக்கும் மம்முட்டிக்குச் சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இப்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார் அழகு லட்சுமி!