வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் எம்.ஜி.ஆர் – சிவாஜி பி.சுசீலா கே.பாலசந்தர் என்ற ஆளுமைகளைச் சந்திக்க வேண்டும்
என்பதே அந்தக் கனவு. ஆனால் என் கனவுக்குரிய பாலசந்தர் என்னைச் சந்திக்க தொலைபேசியில் அழைப்பார் என்று நான் நினைக்கவில்லை. கமல்ஹாசனின் ராஜபார்வையில் 'அந்தி மழை’ எழுதப்பட்ட நேரம்... புதிய திரைமொழியோடு ஒரு கவிஞன் தமிழ் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறான் என்ற செய்தியை பாலசந்தருக்குச் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். அப்போது சொந்தமாக தொலைபேசியோ, வாகனமோ இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு மாடிவீட்டுத் தொலைபேசியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. 'உங்களுக்கு ஒரு போன்; உடனே வாருங்கள்’ என்று. நான் சென்று எடுத்தால் எதிர்முனைக்குரல் நான் பாலசந்தர் பேசுகிறேன் என்றது. நான் நெகிழ்ந்தே போனேன். நாளை என் வீட்டுக்கு வந்து சந்திக்க முடியுமா என்று கேட்டார். மகிழ்ச்சியோடு வருகிறேன் என்றேன். மறுநாள் காலையில் சாலையில் வந்து பார்த்தால் சென்னையில் முழு அடைப்பு. எந்த வாகனமும் ஓடவில்லை. ட்ரஸ்ட்புரத்திலிருந்து மயிலாப்பூர் வாரன் சாலைக்கு 35 நிமிடத்தில் நடந்து சென்றேன். வியர்வையோடு என்னைப் பார்த்த பாலசந்தர் வியந்துபோனார். பாட்டெழுத வாய்ப்பு வரும் என்று போனால் வசனம் எழுத வாய்ப்பு தந்தார் பாலசந்தர்.
பாரதியார் வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். கமல்ஹாசன் தான் பாரதியார். நீங்கள் வசனம் எழுத வேண்டும் என்றார். அச்சத்தோடு ஒப்புக்கொண்டேன்... பாரதியார் குறித்த 300 நூல்கள் திரட்டி இரவு – பகல் குறிப்பெடுத்தேன். ஆனால் அந்தப் படம் தயாராகவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., பாரதியார் படத்தை அரசே தயாரிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் பாலசந்தர் சோர்ந்துபோனார். பின்னாளில் புதுக்கவிதையில் பாரதியாரின் சரிதை 'கவிராஜன் கதை’யாக என்னால் எழுதப்பட்டதற்கு இயக்குநர் சிகரமே முழுமுதற்காரணம்.
அவர் மகாரசிகர். குழந்தையை 'இடுப்பிலுள்ள நந்தவனம்’ என்று தண்ணீர் தண்ணீர் படத்துக்கு நான் எழுதியதை திரையுலகில் அவர் சொல்லாத ஆளில்லை. திருத்தம் சொன்னாலும் அது நெற்றிக்குப் பொட்டு வைத்தது மாதிரி நேர்த்தியாக இருக்கும். சிந்து பைரவியில் –
'கவல ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கும் பாட்டுப்படி
எண்ணியே பாரு
எத்தன பேரு
தங்கமே நீயும்
தமிழ்ப்பாட்டுப் பாடு’ – என்று எழுதியிருந்தேன். ஒற்றெழுத்தை அவர் 'ம்’ என்று மாற்றினார். தமிழ்ப்பாட்டும் பாடு என்று வருகிறபோது அது இரண்டு மொழிப் பாடல்களுக்கும் கட்டப்பட்ட பாலமாகிவிட்டது. அவர் தொழில்நுட்பக் கலைஞர் மட்டுமல்ல; தமிழ்நுட்பக் கலைஞர்.
அவர் கற்றுக் கொண்டேயிருந்தார். தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தார். தெரியாத செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அவர் தயங்கியதே இல்லை. 'அச்சமில்லை அச்சமில்லை’ படத்திற்கு 'ஆவாரம் பூவு’ என்று ஒரு பாட்டு எழுதியிருந்தேன். ஆவாரம் பூ என்றால் என்ன என்று கேட்டார். அதுகுறித்த விவரங்களையெல்லாம் விளக்கினேன். படம் பார்க்கும்போது பார்த்தால் ஒரு கயிற்றுப்பாலத்தில் வண்டி வண்டியாகக் கொண்டுவந்த ஆவாரம் பூக்களைக் கொட்டி நிரப்பியிருந்தார். பாட்டு வரிகளுக்கு உயிர்கொடுக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை உள்ளவர். 'புன்னகை மன்னன்’ படத்தில் 'என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டில் 'ஆரிரரோ யார் இவரோ?’ என்ற வரியை படமாக்கும்போதும் கேமராவையே தூளிகட்டி ஆடவிட்டிருப்பார்.
கமல் மீது காதல் அவருக்கு. தன்னை விட்டு வளர்ந்து வெகுதூரம் போய்விட்டதில் ஒரு சின்ன ஆதங்கமும் அவருக்கிருந்தது. அவன் நாத்திகனாகவே இருக்கட்டும்; அதை ஏன் வெளியே சொல்லி அலைகிறான் என்று என்னிடம் அவரைச் செல்லமாகக் கோபித்ததுண்டு. அவர் கூப்பிட்டு 'வயலும் வாழ்வும்’ எடுத்தாலும் நான் நடிப்பேன்; அவர் மீது நான்கொண்ட பக்தி அப்படியென்று கமலும் என்னிடம் மனம் திறந்திருக்கிறார்.
ரஜினியை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று அவரிடம் ஆர்வமாக நான் கேட்டிருக்கிறேன். 'கனவு மிதக்கும் அந்தக் கண்கள்... கலகம் செய்யும் கண்கள்... அதுதான் ரஜினியை நான் தேர்வு செய்யக் காரணம்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
பாலசந்தர் மார்பின் மீது கற்பூரம் கொளுத்தப்பட்டது. அது கொழுந்துவிட்டு குபுகுபுவென்று எரிந்தது. அந்த நெஞ்சில் எரிந்த 60 வருட அக்கினிதானே தமிழ் சினிமாவைப் புடம்போட்டுக்கொடுத்தது. அந்தக் கற்பூரத்தீ அணைந்துவிடலாம். அந்தக் கலைத்தீ அணையுமா? என்று கருதிக்கொண்டு கண்களில் நீர்முட்ட நின்றபோது... 'தடக்’கென்ற சப்தத்தோடு உள் எரிவாயில் சென்று விழுந்தது பாலசந்தரின் உடல். உடனே திரை விழுந்தது; இரும்புத்திரை. கனத்த நெஞ்சோடு கலங்கிய கண்களோடு கலைந்தோம். பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை.