நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, இலங்கை மட்டுமல்லாது, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்ததைப் போலவே மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழர்கள் மட்டுமல்லாது பெரும்பான்மை சிங்களர்களும் ராஜபக்சேவை விரும்பவில்லை என்பதைக் காட்டியுள்ள தேர்தல் முடிவு இது. அந்த அளவிற்கு ஒரு வல்லாதிக்க சர்வாதிகார ஆட்சியை ஒட்டுமொத்த இலங்கையில் நடத்திக்காட்டி, அதன் வலியை மக்களின் மீது சுமத்திய ராஜபக்சேவிற்கு சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர் இலங்கை வாக்காளர்கள்.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை இலங்கை மக்கள் கொண்டாடும் அதே நேரத்தில், வாக்களித்தபடி தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கியபடி தனது 100 நாளில் 100 திட்டங்கள் என்ற வாக்குறுதிகளை செயல்படுத்தி நன்மை நல்குவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறிசேன தனது தேர்தல் பிரசாரத்தின்போது,
"கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பாதுகாத்தல்,தோட்டப்புற மக்கள் தற்போது வாழும் வறுமையான `லயன் அறை` வாழ்க்கையிலிருந்து மீட்டு அவர்களுக்கு காணி உரிமையுடன் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுத்தல், பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மூலம் உயர் கல்வியை தொடரக்கூடிய வகையில் வசதியுடன் பாடசாலைகளை ஆரம்பித்தல், சட்டவிரோதமான முறையில் தமது வீடுகளில் மற்றும் காணிகளில் பல்வேறு காரணிகளுக்காக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்,
கொழும்பு நகரில் வீடு மற்றும் காணி அபகரிக்கப்பட்ட மக்களின் அச்சொத்தை மீள் மதிப்பீடு செய்து அதன் பெறுமதிக்கு தற்போது வழங்கப்படும் வீட்டு கடனில் கழித்தல், வீட்டு வசதியின்றி வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தல், வடக்கிலும் தெற்கிலும் ஜனநாயக ரீதியான சிவில் நிர்வாகத்தை செயற்படுத்தல்,
மத ரீதியாக பாகுபாடுகள் மற்றும் மத ரீதியாக வன்முறைகளை கட்டுப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல், மத வழிபாட்டு தலங்களுக்கு தேவையான காப்புறுதியினை வழங்குதல், மத ஒருமைப்பாட்டுக்காக செயற்படும் மற்றும் பிரிவினை வாதத்திற்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுக்கும் மதத் தலைவர்களை உள்ளடக்கிய பிரதேச மற்றும் தேசிய சபையை ஸ்தாபித்தல்"
- என முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய 100 திட்டங்களை 100 நாளில் செயல்படுத்த உறுதியளித்து, வாக்காளர்களைக் கவர்ந்து வெற்றிக் கனியை ருசித்த சிறிசேனவிடம், தமிழ் மக்கள் நேர்மையான ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இந்த நேரத்தில் சிறிசேன கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் நினைவில் கொள்வது அவசியமாகும்.

யார் இந்த சிறிசேன? 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள `பொலன்னறுவா` என்னும் ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மைத்திரி பால சிறிசேன. தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரம் கி.பி 10 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை அப்போதைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது.
சோழப் பேரரசால், இலங்கையின் தலைநகராக தேர்வு செய்யப்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்டது பொலன்னறுவை. பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர்களின் காலத்திலும், இலங்கையின் தலைநகரமாக விளங்கியதும் வரலாற்றில் காணக் கிடைக்கின்ற செய்தி.
விவசாயக் குடும்ப வாரிசான சிறிசேன, பொலன்னறுவை ராயல் கல்லூரியிலும், குண்டசாலை விவசாயக் கல்லூரியிலும் படித்து, 1973 ஆம் ஆண்டில் டிப்ளோமா பட்டமும் பெற்றார். பின்னர் அரசியல் ஆர்வத்தால் இலங்கையில் நடந்த ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியால், அப்போதைய அரசுக்கெதிராக 1971 ஆம் ஆண்டில் வெடித்த கிளர்ச்சியில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 20. பின்னர் வெளிவந்த சிரிசேன 1980 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா சென்று மாக்சிம் கார்க்கி கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தை பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.
தொடர்ந்து,1979 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன, இலங்கை சுதந்திரா கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 1994 ஆம் ஆண்டு தேர்தலில் மிக அதிக வாக்குகளைப் பெற்று சாதனையும் படைத்தார். இதன் பின்னர் இவர் பல ஆண்டுகள் வேளாண்மைத் துறை சார்ந்த அமைச்சராகவும், இறுதியில் ராஜபக்சே அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி வரை பதவியில் இருந்துள்ளார்.

ஆரம்பகாலம் தொட்டு கம்யூனிஸ சித்தாந்தத்தில் பிடிப்பு கொண்டவர் என்பதால் இவர் மீதான விமர்சனத்திற்கும் கருத்துமாச்சரியங்களுக்கும் பஞ்சமில்லை. கந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி கொழும்பின் புறநகர் பிலியந்தலை, பொரலஸ்கமுவ என்ற இடத்தில் சிறிசேன மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. அதில் சிறிசேன உயிர் தப்பினார். அதில் ஒருவர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்தனர்.
விடுதலைப்புலிகள் கை ஓங்கி இருந்தபோது 5 முறை கொலைத் தாக்குதலுக்கு இலக்கானவர் என்பதும், எப்போதும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இவர் மீது ஒரு கண் வைத்து இருந்தனர் என்பதும் சிறிசேனவின் அரசியல் வரலாறு.
இந்த நிலையில்தான் சிறிசேன சென்ற ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதியன்று ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருந்து விலகி, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் சேர்ந்து அதிபர் தேர்தலை எதிர் கொண்டார்.
இலங்கையின் அனைத்து அதிகாரமும் ராசபக்சே குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஊழல், உறவினருக்கான சலுகை போன்றவற்றால் இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி அழைத்துச் செல்லப் படுவதாகவும் தேர்தல் பிரசாரத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
பொது சிவில் நிர்வாகத்தில் நம்பிக்கை கொண்ட மைத்திரிபால சிறிசேன, ராஜபக்சேவால் கொடுமைகளுக்கு ஆட்படுத்தப் பட்டு நிம்மதி இழந்து வாழ்க்கையை தொலைத்த தமிழர்கள் நன்மை பெறவேண்டும் என்ற எதிர் பார்ப்பில் வந்த வெற்றி இது என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப ஆட்சி நடத்துவாரா என்பது வரவிருக்கும் நாட்களில்தான் தெரியவரும்!