மலையக இளைஞர் யுவதிகளை ஏமாற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள்
விழிப்பாக இருக்கக் கோருகிறார் அமைச்சர் வேலாயுதம்
இத்தகைய சிலர் தோட்டப்புறங்களுக்கு துண்டுப் பிரசுரங்களுடன் நேரடியாகவே வருகை தந்து பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன், பத்திரிகைகளிலும் இவை தொடர்பாக கவர்ச்சி கரமான விளம்பரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த பலர் இப்போது முறைப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகையவர்கள் தொடர் பாக இப்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. சரியான ஆதாரங்களுடன் ஏமாற்றுக்காரர்கள் சட்டத்தின் முன்பாக விரைவில் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது நாட்டுப் பெண்கள் தொழிலுக்குச் செல்வதனை அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகிறது. அதற்கு அங்கு எமது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளே காரணம். பல வெளியே தெரியாத கொடுமைகளும் அங்கு நிகழ்கிறது.
இந்நிலையில் தோட்டப்புறப் பெண்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அங்கு எவரும் அனுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு எவராவது வெளிநாட்டிற்கு தொழில் பெற்றுச் செல்வதாயின் அது அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற தொழில் முகவர் நிலை யங்களால் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டுமே தவிர முன் பின் தெரியாத முகவர்களை நம்பி ஏமாறக் கூடாது. அதிலும் எமது பெண்களை வற்புறுத்தி அல்லது பணத்தாசை காட்டி வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்புவதை நாம் ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது எனவும் அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார்.