சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்
சில்வா வலியுறுத்தினார். ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
20வது திருத்தம் தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் முறை மாற்றமானது நாட்டிலுள்ள சகல தரப்பினரும் பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை நீக்குவதாக அமையக்கூடாது.
சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து, இரண்டு பிரதான கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் அதிகரிக்கும் வகையிலான தேர்தல் முறை மாற்றமே வர்த்தமானியில் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறி வித்தலில் உள்ள தேர்தல் மறுசீரமைப்புக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை யென்றும் அவர் கூறினார்.
தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடப்பட்ட விடயம் வேறு, வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது வேறொன்று. பூனையை வளர்ப்பதாகக் கூறி புலிக் குட்டியைக் கொண்டு வந்துள்ளனர். புலிக்குட்டி பெரிதாக வளர்ந்ததும் அதனால் ஏற்படும் அழிவு பாரியதாக இருக்கும். அதேபோல ஜனநாயகத்துக்கு முரணான வகையில் கொண்டுவரப் பட்டிருக்கும் இந்தத் தேர்தல் முறை எதிர்காலத்தில் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தும்.
சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திலிருந்து இல்லாமல் செய்வதே கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு அடிக்கல்லாக அமைந்தன. புதிய தேர்தல் முறைமாற்றத்தின் மூலம் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனால் எதிர்காலத்திலும் அவ்வா றானதொரு நிலைமையே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஜே.வி.பி தொடர்ந்தும் சவாலாக உள்ளது. தமக்கு சவாலாக இருக்கும் ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தேர்தல் முறைமாற்றத்தை உள்ளடக்கியே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.