ஹக்கீம், திகாம்பரம் அமைச்சரவையிலிருந்து வெளியேற வேண்டும்
வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் முறைமாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது
அரசியலமைப்புத் திருத்தம் அமைச்சரவையின் பூரண அனுமதியை அல்லது பெரும்பான்மையானவர்களின் அனுமதியைப் பெற்று வெளியிடப்பட்ட ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், இத்தேர்தல் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாயின் ஹக்கீம், திகாம்பரம் போன்றவர்கள் அமைச்சரவையைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.
20ஆவது திருத்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் சிறிபால.டி. சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல்முறை மாற்றத்தை நிறை வேற்றுவதற்கான உண்மையான தேவை ஐ.தே.வுக்கு இருக்கிறதா என்றும் கேள்வி யெழுப்பிய அவர், 19ஆவது அரசியல மைப்பை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிய ஐ.தே.க தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். தேர்தல்முறை மாற்றம் நிறைவேற்றப்படுவதை மேலும் காலதாமதப் படுத்தும் முயற்சிகளில் ஐ.தே.க ஈடுபட்டிருப்பதாகவும், பல தடவைகள் இதனைத் துரிதப்படுத்த எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறினார்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வது மற்றும் தேர்தல்முறை மாற்றத்தை ஏற்படுத்துவது என்ற இரண்டு பிரதான நோக்கங்களுக்காவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.