வங்க தேசத்தில் ரமலான் இலவசங்கள் வாங்கச் சென்ற இடத்தில ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் வடக்கு நகரான மைமென்சிங்கில் புனித ரமலான் மாத நோன்பையொட்டி, அங்கு ஏழைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது பெரும் கூட்டநெருக்கடி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழில் அதிபர் ஒருவர் வழங்கிய இலவச பொருட்களை வழங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றபோது கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சுமார் 23 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பலர் படுகாயமும் அடைந்தனர்.
இது தொடர்பாக கோட்வாலி போலீஸ் நிலைய அதிகாரி காம்ருல் இஸ்லாம் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து இதுவரையில் சுமார் 23 சடலங்களை மீட்டு உள்ளோம். காயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்” என்றார்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று அப்பகுதியை சேர்ந்த மீடியாக்கள்
இந்நிலையில் இலவச பொருட்களை வழங்கிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த மூன்று நபர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2002ஆம் ஆண்டும் இதேபோன்று ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு நடந்துள்ள துயர சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.