இது தொடர்பாக மேல்மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் மேலும் தெரிவித்திருப்பதாவது, காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.
அண்மையில் ஒரு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் பிள்ளையை பறிகொடுத்த தாயொருவர் தனது குறையை கூறி கதறி அழுகிறார். ஆனால் அதைக் கேட்கும் அதிகாரி ‘உணவு உட்கொண்டு’ மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதை காணக்கூடியதாகவிருந்தது . ஒரு தாயின் கண்ணீரையும் வேதனையையும் கேட்காமல் இவ்வாறு செயற்படுவதால் நாட்டுக்கு ‘சாபமே’ கிடை க்கும்.
தாய்மாரின் கண்ணீருக்கு சக்தியுள்ளது. எனவே அதன் சாபத்திற்கு உள்ளாகி விடக்கூடாது. எனவே பல தசாப்தங்களாக காணாமல் போனவர்கள் தொடர்பாக தீர்வு கிடைக்காமல் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் தத்தளிக்கும் தாய்மாருக்கு ஆறுதலை பெற்றுக்கொடுக்க ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு தலையிட வேண்டும். காணாமல் போன தமது உறவுகள் உயிரோடு இருக்கின்றனரா அல்லது அவர்களுக்கு என்னவானது எனும் உண்மையை தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்க வேண்டும்.
அதேபோன்று நல்லாட்சிக்கான அரசும் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் நியாயமாக நீதியாக நடத்தப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.