திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் ஆரோக்கியராஜ் (40). இவர் கடந்த 12-ம் தேதி எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது, ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்று கீழே கிடந்துள்ளது. இந்த பணத்தை எடுத்த ஆரோக்கியராஜ், பழநி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மூலம் டவுன் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் எஸ்.பி.ஐ. வங்கி அலுவலர்கள், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வைக்க வந்த இடத்தில் ஒரு லட்சம் ரூபாயை காணவில்லை என புகார் அளிக்க வந்துள்ளனர். அப்போது, அவர்கள் கீழே தவறவிட்ட விபரத்தை கூறி பணம் ஒப்படைக்கப்பட்டது.
பணத்திற்கு ஆசைப்படாமல் ஒரு லட்சத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆரோக்கியராஜை பாராட்டி, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கினார்.
இது குறித்து ஆரோக்கியராஜ் கூறுகையில், "எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகள் ரூ.5 லட்சத்தை ஏ.டி.எம். மையத்தில் வைக்க வந்தபோது 1 லட்ச ரூபாய் காணவில்லை என புகார் அளிக்க காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் விஷயத்தை கூறி பணம் ஒப்படைக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.