விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதால் சிலர்
தனக்கு கொலை மிரட்டுவதாக கோவையைச் சேர்ந்த கவிதா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மீது திடுக் புகார் ஒன்றை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கோவையைச் சேர்ந்த கவிதா. கடந்த 2013-ம் ஆண்டு முதல் பல்வேறு புகார்களை இவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்த கவிதா, தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ' திருமாவளவனிடம் நான் பேசியது, பழகியது எல்லாமே உண்மை. ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இந்த சூழலை பயன்படுத்தி என்னை சிலர் மிரட்டுகிறார்கள். கோவை மாநகர காவல்துறை அதிகாரி மற்றும் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களை கொண்டு என சொத்தை அபகரித்து வருகின்றனர். இப்போது கூட என் குழந்தை, என் நகை அவர்களது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
என் சொத்துப்பத்திரம், வங்கி கணக்கு பத்திரங்களில் கையெழுத்து வாங்கி விட்டனர். என் வீட்டில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி, என்னை கண்காணிக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க. பிரமுகர்கள் இதில் தொடர்பு கொண்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
திருமாவளவனுக்கு எதிராக கவிதா புகார் கூறுவது கடந்த இரு ஆண்டுகளில் இது 10-வது முறை. இந்த புகார்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுப்பு தெரிவித்துவருகிறது. கவிதாவுக்கும், கட்சித்தலைவர் திருமாவளவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து கவிதா துவங்குவது ஏன் என்பதுதான் புரியவில்லை.