ஆயுதப் போர் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு மாவீரர் நாள் மிக எழுச்சியுடன் நினைவேந்தப்பட்டது. இந்த ஆண்டும் மாவீரர் நாள் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு – மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நினைவேந்துவதற்காக ஏற்பாடுகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிற்பகல் 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
உடுத்துறை
உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவுகளின் போக்குவரத்துக்கான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ளது.
பருத்தித்துறையிருந்து 2 மணிக்கு புறப்படும் பேருந்து மந்திகை – வல்லிபுரம் – அம்பன் ஊடாக உடுத்திறை மாவீரர் துயிலும் இல்லம் வந்தடையும் என்றும் கேவிலிலிருந்து பி.ப. 3 மணிக்குப் புறப்படும் பேருந்து கட்டைக்காடு வெற்றிலைக்கேணி ஊடாகத் துயிலுமில்லம் வந்தடையும். வெளியிடங்களிலிருந்து வருபவர்களுக்காகப் புதுக்காடுச் சந்தியிலிருந்து மருதங்கேணி ஊடாக துயிலுமில்லம் வரை போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீருவில்
தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களைப் போன்று அங்கு நினைவேந்தல் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்.பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபி சீரமைக்கப் பட்டு புதுப்பொலிவுடன் மாவீரர் நினைவேந்த லுக்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாட்டி
தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மாவீரர்களை நினைவேந்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கோப்பாய்
கோப்பாய் இராசவீதியில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள பகுதியில் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போன்று மாவீரர்நாள் இன்று அங்கு நடைபெறும் என்று ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி, கனகபுரம் முழுங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குச் சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பினரும் இணைந்து இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். எந்தவித நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன என்றும், நினைவேந்தலில் அனை வரும் கலந்து கொண்டு மாவீர்களை உணர்வெழுச்சியுடன் அஞ்சலிப்போம் என்றும் கனகபுரம் மாவீரர் பணிக்குழுச் செயலாளர் குமாரசிங்கம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு
அளம்பில் தேவிபுரம், முள்ளிவாய்க்கால், இரணைப்பாலை துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதி இளைஞர்கள், உறவினர்கள், ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு
அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. போக்குவரத்து, குடி தண்ணீர், உணவு போன்ற அனைத்து ஏற்பாடுகளும் மாவீரர் பணிக்குழுவால் முற்கொள்ளப்பட்டுள்ளன. அனைவரும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஏனைய மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.