
அமெரிக்கா செல்லும் வழியில் பிரதமர் மோடியின் விமானம் அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இதனிடையே அவரது விமானம், செல்லும் வழியில் அவசர தேவைக்காக, ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இது நிகழ்ச்சி நிரலில் இல்லை.
பொதுவாக விமானம் செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக, எதிர்பாராத வகையிலான தொழில் நுட்ப கோளாறுகள் அல்லது விமானத்தினை தரையிறக்கம் செய்ய வேண்டிய அவசர தேவை ஏற்படும்பொழுது விமானம் தரையிறக்கப்படும். இதனை அவசர தேவைக்கான நிறுத்தம் என கூறுகின்றனர்.
விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, ஜெர்மனி நாட்டுக்கான இந்திய தூதர் முக்தா தோமர், தூதரக அதிகாரி பிரதீபா பார்க்கர் ஆகியோர் வரவேற்றனர். ஜெர்மனியில் 2 மணி நேரத்திற்கு பிறகு, அவரது விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது.
இன்று முதல் 27-ஆம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதே நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.