அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி பெலோசி வருகையை தொடர்ந்து தைவானை சுற்றி ராணுவ பயிற்சி என்ற பெயரில் போர் கப்பல்களை நிறுத்தி சீனா பூச்சாண்டி காட்டி வருகிறது. மஞ்சள் கடலில் முப்படை ராணுவ பயிற்சி சனிக்கிழமை துவங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ளது.மேலும் இம்மாதம் முழுவதும் பல நேரடி ராணுவ நடவடிக்கைகளில் சீன ராணுவம் ஈடுபடவுள்ளது.
ஏற்கனவே உலகளவில் சிப் தயாரிப்பில் தைவான் முன்னணியில் உள்ளது. சர்வதேச செமி கண்டக்டர் சந்தையிலும் தைவான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தைவானின் சுதந்திர நாடு கொள்கையில் அமெரிக்காவிற்கு முக்கியமான புவிசார் அரசியல் ஆர்வமாக உள்ளது. சீனாவைப் போலவே, உயர் தொழில்நுட்ப சிப்களுக்காக தைவானைச் சார்ந்துள்ளது.
சீனா சொந்தமாக செமி கண்டக்டர் தொழிலை வளர்த்து வருகிறது. இருப்பினும், உயர் மற்றும் அடிப்படை சிப்களுக்கு தைவானைச் சார்ந்து உள்ளது. சிப்கள் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மூளை போன்றவை. சிப்புகள் ஸ்மார்ட்போன்,லேப்டாப், டேட்டா சென்டர்கள், ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பெலோசி வருகையை தொடர்ந்து தைவானுக்கு நெருக்கடி தரும் சீனாவின் நடவடிக்கை, தைவானின் உயர்ரக சிப்களை பெறுவதை தடுக்கும். சீனாவை பொறுத்தவரை தைவானை தனது நாட்டின் ஒரு அங்கமெனவும், மூன்றாவது முறையாக அதிபராக கோலாச்சும், சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி ஜின்பிங்கிற்கு தைவானை மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. சீன கம்யூ அரசு, எந்தவொரு நாட்டை சேர்ந்த தலைவர்கள் தைவானுக்கு வருவதை விரும்புவதில்லை. குறிப்பாக அமெரிக்கா வருவதில் அதற்கு துளியும் விருப்பமில்லை.
அமெரிக்காவை பொறுத்தவரை, சிப் தேவையில், சீனாவை விடவும் அதிகளவில் தைவானை சார்ந்துள்ளது. டி.எஸ்.எம்.சி எனப்படும் தைவான் செமி கண்டக்டர் மேனுபேக்சரிங் கம்பெனியை சார்ந்துள்ளது. சீனாவின் தாக்குதலால் ஏற்படும் சேதாரத்தை தவிர்க்க, கடந்த சில மாதங்களாகவே, தைவானின் முக்கியமான சிப் தயாரிப்பாளர்களாக டி.எஸ்.எம்.சி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின், சிப் தயாரிப்பு ஆலையை அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு மாற்றுமாறு தைவான் தலைமையிடம் கூறி வருகிறது. உலகளாவிய சிப் சந்தையில், டி.எஸ்.எம்.சி மட்டும் 53 சதவீதம் சந்தையை கையில் வைத்துள்ளது.
மற்ற தைவான் நிறுவனங்களை சேர்ந்த உலக சந்தையில் அதன் மொத்த விழுக்காடு 63 சதவீதமாக உள்ளது. டி.எஸ்.எம்.சி அதன் உற்பத்தியில் சிலவற்றை அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் கொண்டு செல்வதற்கான முடிவு, சீனாவின் செமி கண்டக்டர் பயன்பாட்டை துண்டித்து, நவீன பொருளாதாரமாக அதன் வெளிப்பாட்டைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக பெய்ஜிங்கால் பார்க்கப்படுகிறது.
தைவான் பயணத்தின் போது, பெலோசி டி.எஸ்.எம்.சி தலைவர் மார்க் லூயியை சந்தித்தார்,அமெரிக்காவில் செயல்பாடுகள் மற்றும் சீனாவிற்கு அதிநவீன சிப்கள் வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்துள்ளார்.
அமெரிக்க பார்லி.,யில் இரு அவைகளிலும், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சிப்ஸ் சட்டத்தின்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் அறிவியல் ஆராய்ச்சிக்காக 280 பில்லியன் டாலரை அனுமதித்துள்ளது. இதில் சிப்மேக்கர்களை ஊக்குவிக்கவும், அமெரிக்க செமிகண்டக்டர் தொழிலை முடுக்கிவிட 52 பில்லியன் டாலரும்அடங்கும்.
சீனாவில் தைவானிய சிப்மேக்கர்களின் இருப்பு எப்போதும் வாஷிங்டனுக்கு கவலையாக இருந்தாலும், 5 ஜி தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உயர் தொழில்நுட்பப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
அரசின் மானியங்களை ஏற்கும் நிறுவனங்களை, சீனாவிலோ அல்லது பிற நாடுகளிலோ 10 ஆண்டுகளுக்கு தங்கள் சிப்மேக்கிங் திறனை விரிவுபடுத்த வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்க எம்.பிக்கள், இந்தச் சட்டத்தை பொருளாதார ரீதியாகவும் மற்றும் தேசிய பாதுகாப்பு அடிப்படையில் சீனாவுடனான போட்டியின் .இன்றியமையாத ஒன்றாக கருதுகிறார்கள்.
1990ல் இருந்து அமெரிக்காவின் செமி-கண்டக்டர் உற்பத்தியின் பங்கு 37 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த திறனில் கிட்டத்தட்ட 75 சதவீதம் இப்போது ஆசியாவில் உள்ளது.உலகளாவிய முன்னணி சிப் நிறுவனங்கள், சீனாவில் தங்கள் சிப்களை உற்பத்தி செய்கின்றனர்.
நான்ஜிங்கில் உள்ள ஆலையில் 16 மற்றும் 28 நானோ மீட்டர் சிப்களை உருவாக்கும் ஒரு ஆலை உள்ளது. சாம்சங், எஸ்கே ஹைனிக்ஸ், இன்டெல் மற்றும் மைக்ரான் போன்ற முன்னணி நிறுவனங்களும் சீனாவில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன. ஆனால் சில பெரிய சிப்மேக்கர்கள் சீனாவில் தங்கள் அதிநவீன தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றனர்.
சிப்ஸ் சட்டம் நாட்டில் இருக்கும் மற்றும் குறிப்பிடத்தக்க வணிக நலன்களைப் பாதுகாக்க, சிப் தயாரிக்கும் நிறுவனங்கள் சீனாவில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான ஏற்பாடு உள்ளது. ஆனால் இது 28 நானோ மீட்டர் அல்லது பழைய தலைமுறை சிப் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ‘லெகசி செமி-கண்டக்டர்கள்’ தயாரிப்பிற்கு மட்டுமே பொருந்தும். செமி கண்டக்டர்களுக்கு, சிறிய நானோமீட்டர் சிப் மிகவும் மேம்பட்டது.
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி, பராக் ஒபாமாவின் ஆசிய மையத்துடன் (மத்திய கிழக்கிலிருந்து விலகி), டிரம்பின் கீழ் (வர்த்தக கட்டணங்கள் மற்றும் குவாட்) தொடர்ந்து பைடனின் இந்தோ பசுபிக் கொள்கைகள் குறித்து பெய்ஜிங் கவலை கொண்டுள்ளது. சீனாவிற்கு வெளியே ஆசிய நாடுகளின் பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்த அமெரிக்கா ஊக்குவிக்கிறது.
ஆனால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் குறைவாகவே உள்ளது. 2021ம் ஆண்டில், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் கோவிட் காலத்திற்கு முந்தைய அளவில் இருந்து 20 சதவீதம் அதிகரித்து 670 பில்லியன் டாலர்களை எட்டியது.தைவானின் மிகப்பெரிய வர்த்தக நாடாக சீனாவும் தொடர்கிறது.
2021ம் ஆண்டில் சீனாவுடன் தைவானின் வர்த்தகம் 188 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது.பல சிப் தயாரிப்பாளர்கள் சிப்ஸ் சட்டத்தை வரவேற்றுள்ளனர். டிஎஸ்எம்சி, சாம்சங், எஸ்கே ஹைனிக்ஸ், இன்டெல் மற்றும் மைக்ரான் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளன.
ஆனால் நிபுணர்கள், செமி கண்டக்டர்களுக்கான சூழலை மீண்டும் உருவாக்குவது செலவுமிக்கது மட்டுமின்றி பல ரசாயனங்கள் மற்றும் பொருட்கள், சிப் தயாரிக்கும் கருவிகள் மற்றும் பிற நுகர்வு பாகங்களை வழங்குவதற்கான பெரிய சப்ளை நெட்வொர்க்கை உள்ளடக்கியது என்று வாதிடுகின்றனர்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி மூலம் 70 சதவீத சிப் தேவைகளை பூர்த்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. அது எட்ட இயலாத ஒன்று. அதை விட உயரத்தில் இருந்தால் தான் டி.எஸ்.எம்.சி மற்றும் சாம்சங் போன்ற பிராண்டுகளுடன் போட்டியிட முடியும்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உயர்தொழில்நுட்பப் போர் சூடுபிடித்துள்ள நிலையில், தைவானை சீனாவிலிருந்து விலக்குவதற்கான வழிகளை அமெரிக்கா தொடர்ந்து கண்டறியும்.