தடை பல கடந்து தமிழகம் முழுவதும் 7-ந் தேதி ரிலீஸ் ஆகிறது கமலின் விஸ்வரூபம். உள்துறை செயலாளர் ராஜகோபால் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன் பாட்டின்படி விஸ்வரூபத்திற்கான தடை நீங்கி இருக்கிறது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் என்னதான் நடந்தது? nakkeeran
தலைமைச் செயலகத்தில் 2-ந்தேதி மதியம் 3.30-க்கு உள்துறைச் செயலாளர் அறையில் சமரச பேச்சுவார்த்தைக்கான கூட்டம் தொடங்கியது.
உள்துறை ராஜகோபாலை தொடர்ந்து கூட்டமைப்பின் சார்பில் முதலில் பேசிய ஜவாஹிருல்லா,’""எங்களைப் பொறுத்தவரை படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள் முரண் பாடாகத்தான் இருக்கிறது. இருப்பினும் எல்லாத்தையும் கூட்டி கழித்துப் பார்த்து "நீக்கப்பட வேண்டும்' என மிக முக்கியமான காட்சிகள்+வசனங்கள் என்று 15 விஷயங்களை வரையறை செய்திருக்கிறோம். அந்த பட்டியல் உங்களுக்குத் தெரியும். அதனால் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை அகற்றிவிட்டால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றவர், ""குரானை படித்துவிட்டு அதன் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று படம் நெடுக காட்டியிருக்கிறீர்கள். அதாவது, ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்பும் குரான் வாசிக்கப் படுகிறது. இதை எந்த ஒரு முஸ்லிமும் ஏற்க மாட்டான்''’என்று சொல்ல, அப் போது கமல்,’""கேரளாவிலும், ஆந்திரா விலும் படம் ரிலீசாகியிருக்கிறது. யாரும் பிரச்சினை செய்யவில்லை. வெளிநாடு களில் ரிலீஸான போதும் எவ்வித எதிர் வினைகளும் இல்லை''’என்று விளக்கமளித்தார்.
அந்த சமயத்தில் குறுக்கிட்ட உள் துறை செயலாளர்,’""இரு தரப்பிடமும் அவரவர்கள் நிலையில் விளக்கமும் நியாயமும் இருக்கத்தான் செய்யும். அதைப் பேசினால் 2 மணி நேரம் போதாது. அதனால் நியாயங்களும் விளக்கங்களும் பற்றி விவாதிக்காமல் நேரடியாக பிரச்சினையை பேசுவது சரியாக இருக்குமென நினைக்கிறேன்''’என்றார்.
அடுத்துப் பேசிய த.மு.மு.க.வின் தலைவர் ரிஃபாயி, ""தொழுகை நடத்தி விட்டு பாம் வெடிக்க வைக்கிற காட்சிகள் இருக்கிறது. அப்படி வெடித்து சாகடிக்கப்படும் போது இஸ்லாம் அடை யாளங்கள் காட்டப்படுகிறது. இதனைப் பார்க்கும்போது தொழுகை செய்யும் முஸ்லிம் கள் எல்லோரும் தீவிரவாதிகள்தான் என்கிற சிந்தனையை பொதுமக்களுக்குப் பதிய வைக்கிறீர்கள்'' என்று சொன்னபோது, ""புனிதமான இஸ்லாத்தின் வழிபாடுகளை தீவிரவாதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சொல்லத்தான் அந்த காட்சி. தொழுகையை தீவிரவாதமாக நான் சித்தரிக்கவில்லை''’’என்று கமல் விளக்கமளிக்க, ஆனால் இதை ஏற்க மறுத்த கூட்டமைப்பினர், சமூகத்தில் அந்தக் காட்சி எப்படி புரிந்து கொள்ளப்படும் என்பதை தெளிவுபடுத்தினர்.
அப்போது, ""ஒவ்வொரு பள்ளி வாசலிலும் தொழுகைக்கு அழைப்பதற்காக பாங்கு ஓதப்படும். ஓதப் படுதலிலுள்ள விஷயங்கள் ரொம்பவும் புனிதமான வார்த்தைகள். அந்த பாங்கு ஓதலையும் தொழுகையும் தீவிரவாத செயல்களோடு தொடர்புபடுத்துவது சரி யல்ல. அந்த காட்சிகளை நீக்க வேண்டும்'' என்று இந்திய தவுஹீத் ஜமா-அத்தின் பொதுச்செயலாளர் முனீர் அழுத்தமாக சொல்ல, ""அத்தகைய காட்சிகளில் முடிந்தளவு இஸ்லாமிய அடையாளங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் முழுமையாக நீக்கினால் படத்தைப் புரிந்துகொள்ளவே முடியாது'' என்று கமல் விளக்கினார். குறுக்கிட்ட ராஜகோபால், ""நீங்கள் அதை கன்சிடர் பண்ணலாமே?'' என்று கமலிடம் சொல்ல, ""அந்த காட்சிகளின் நீளத்தை குறைத்துக்கொள்கிறேன்'' என்று அவர் கூற, அதற்கு ஒப்புக்கொண்ட கூட்டமைப்பினர், ""அப்படியானால் ஒரு விஷயம் நீங்கள் செய்யுங்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்பு திரையில் நீங்கள் தோன்றி, "இந்தப் படத்தில் வருவது அனைத்தும் கற்பனையே. தனிப்பட்ட ஒரு மதத்தையோ, தனி நபரையோ குறிப்பிட்டு எடுக்கப்படவில்லை' என்று சொல்வது போல இணைத்துவிடுங்கள்'' என்றனர். அதற்கு கமல், ""நான் தோன்றி பேசுவது சாத்திய மில்லை. வேண்டுமானால், அந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு ஸ்லைடு போட்டு விடுகிறேன்'' என்றார்.
இதனையடுத்து "அல்கொய்தா இயக்க தலைவர் முல்லா உமர், தமிழகத்தில் கோவை, மதுரை நகரங்களில் தங்கியிருந்ததாக' சொல்லப்படும் காட்சி, கழுத்தை அறுக்கும் காட்சிகள், அல்லாஹு அக்பர் என்கிற வார்த்தை ஆகியவற்றை நீக்கவும் அது தொடர்பான சில இடங்களில் வரும் ஒலி உச்சரிப்புகளை மியூட் பண்ணவும் ஒப்புக்கொண்டார் கமல்.
இறுதியாக, மொத்தத்தில் கூட்டமைப்பினர் 15 காட்சிகளை பட்டியலிட, அதில் 7 காட்சிகளை நீக்கவும் ஒலிகளை மியூட் பண்ணவும் கமல் ஒப்புக்கொள்ள, இரு தரப்பினரிடமும் உடன்பாடு ஏற்பட்டது. இதனை ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு ஒப்புவித்தார் ராஜகோபால். இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்குமிடையே ஏற்பட்ட உடன்படிக்கையை எழுத்துப்பூர்வமாக எழுதி கையொப்பமிட்டனர். விஸ்வரூபம் கிளப்பிய மத டென்ஷனும் தணிந்தது.
-இளையர்
படங்கள் : ஸ்டாலின்
கேள்விக்கு என்ன பதில்?
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததையடுத்து தலைமைச் செயலகத்திலுள்ள கான்ஃப்ரன்ஸ் ஹாலில் இரு தரப்புக்கும் டீ-பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தது அரசு. இந்த டீ பார்ட்டியில் ""என்னதான் இருந்தாலும் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று நீங்கள் சொன்னது எங்களுக்கே வலித்தது. உங்கள் தரப்பு நியாயத்திற்காக இங்கு இருந்துதான் நீங்கள் போராட வேண்டும்'' என்று கமலிடம் கூட்டமைப்பினர் சொல்ல, ""இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். எந்த நாட்டிலும் இல்லாத படைப்பு சுதந்திரம் இந்தியாவில் இருப்பதாகத்தான் நினைக்கிறேன். அந்த எண்ணத்திற்கு எதிராக சில நிகழ்வுகள் நடக்கும்போது ஒரு படைப்பாளி, மதச்சார்பற்ற நாட்டை தேடுவதுதான் இயல்பானது. ஒரு குறுகிய வட்டத்துக்குள் படைப்பாளிகளை அடக்க முயல்வது ஆரோக்கியமானதா?'' என்ற கமல், ""ஒரு முஸ்லிம் அமைப்பு என்னைப் பற்றியும் என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும் என் குடும்பத்தினரைப் பற்றியும் மேடை போட்டு தரக் குறைவாக நாலாந்தர வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறது. புனிதமான இஸ்லாம் இதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறதா?'' என்று கமல் கேட்டபோது, யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
|
லேட்டஸ்ட் தகவல்!
பொங்கலுக்கு வெளியான படங்களில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா?' மட்டுமே சினிமா வர்த்தகர்களை மகிழ்ச்சிகரமாக ஆக்கியது. "அலெக்ஸ் பாண்டியன்', "சமர்' என எதிர்பார்த்த படங்கள் வர்த்தகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதேபோல் இந்த வாரம் வெளியான மணிரத்னத்தின் "கடல்', விக்ரமின் "டேவிட்' படங்களும் கூட கண்ணக் கட்டுவதாக புலம்பும் வியாபாரப் புள்ளிகள் "விஸ்வரூபம்' மூலமே கல்லா கட்ட முடியும் என கணக்குப் போட்டிருக்கிறார்கள். கமலின் பொருளாதார நெருக்கடியை கமல் வாயாலே கேட்டு அறிந்த ரசிகர்கள் மணியார்டராகவும், காசோலையாகவும் கமலுக்கு அனுப்பி வைக்க... அவர்களுக்கு நன்றிக் கடிதத்துடன் திருப்பியனுப்பும் வேலைகளில் கமல் ஊழியர்கள் பிஸி.
"நாளை மதமும், அரசியலும் என்னை வறியவனாக்கினாலும், உண்பதற்கும், ஒதுங்குவதற்கும் அறிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளது. நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே!' என புதிய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் கமல். "அபூர்வ சகோதரர்கள்' அப்புவை மையப்படுத்தி ஹாலிவுட்டில் படம் பண்ண ஏற்பாடுகளைச் செய்கிறார் கமல். இது தொடங்கப்படும் பட்சத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் கமல் வெளிநாட்டில்தான் இருப்பார்... என்கிறது லேட்டஸ்ட் தகவல் ஒன்று. |