மேல்முறையீட்டில் உண்மை வெல்லும் :
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த
டி.எம். செல்வகணபதி

டி.எம். செல்வகணபதி
தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடந்த போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும்
பணியை தமிழக அரசு மேற்கொண்டது.
இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனடிப்படையில், 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட ஐவர் மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் செல்வகணபதி, ஆச்சாரியலு, சத்திய மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50 ஆயிரமும், பாரதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனை 2 ஆண்டு ஜெயில் என்பதால், 5 பேரும் 2 மாதங்களுக்குள் அப்பீல் செய்யும் வரை ஜெயிலுக்கு செல்ல வேண்டியதில்லை. அதுவரை இந்த ஜெயில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று திமுக மாநிலங்களை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’எனக்கு தற்போது அரசியலில் சோதனையும், சவாலான காலமாகும். நீதிமன்றத்தில் நடைபெற்ற மயான மேற்கூரை தொடர்பான வழக்கில் வியாழக்கிழமை எனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மதித்து நடப்பவன். எனவே, எனக்கு எதிராக தீர்ப்பு வந்ததையடுத்து நான் எனது மாநிலங் களை உறுப்பினர் பதிவியை ராஜினாமா செய்கிறேன். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவருக்கு முறைப்படி எனது கடிதத்தை அனுப்பியுள்ளேன்.
பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக வழக்குகள் பதிவு செய்வது ஜனநாயகத்தில் வாடிக்கையாவிட்டது. கடந்த 1996-இல் தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் 71 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. 333 சான்றாவணங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எங்கள் தரப்பில் 18 ஆவணங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டடன. இதில் 71 சாட்சியங்களில் ஒன்றில் கூட இந்த பணிகள் தொடர்பாக லஞ்சம் பெற்றதாக ஒன்றில் கூட பதிவு செய்ய வில்லை. நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியாக எங்கும் குறிப்பிடவில்லை.
அப்போதைய ஜெயலலிதா ஆட்சியல் இந்த பணிகள் தொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், எஸ்.டி.சோமசந்தரம் மற்றும் உயர் அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது.
அந்தக்குழு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் மயானத்தில் மேற்கூரைகள் அமைக்க நான் கையெழுத்து மட்டுமே போட்டேன். இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு இல்லை. நாங்கள் எடுத்த முடிவின் படி அரசுக்கு 23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் நலத் திட்ட பணிகள் தொடர்பாக குறைகள் ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகள் மட்டுமே பொறுப்பு.
கடந்த 2004-இல் தலைமைச் செயலாளராக இருந்த சங்கர், பணிகளுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக எடுக்கப்பட்டதாக கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் திரும்பப்பெறப்பட்டது. ஆனால் நாகப்பட்டணம் நீதிமன்றத்தில் மட்டும் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து நான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளேன். அப்போது உண்மை வெல்லும்’’ என்றார்.