புனே நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு
எந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சி சின்னத்திலேயே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்திற்கான ஐந்தாவது கட்டத்தேர்தல்
மகாராஷ்ட்ராவிலுள்ள 19 தொகுதிகள் உட்பட 12 மாநிலங்களில் மொத்தம் 121 தொகுதிகளில் இன்று நடைபெற்றது.
அதன்படி புனே நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் புனே நகரில் உள்ள ஷாம்நாவ் கல்மாடி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்காளர்கள் வரிசையாக சென்று வாக்களித்த நிலையில், எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே பதிவாகி, அதற்கு நேராக உள்ள மின்விளக்கு ஒளிர்ந்தது.
தொடர்ந்து இவ்வாறு பதிவானதை அறிந்த வாக்காளர்கள், உஷாராகி இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து கோளாறான அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அங்கிருந்து அகற்றப்பட்டு, அதற்குப்பதிலாக வேறொரு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் ஏற்கனவே வாக்களித்த 28 பேர்களுக்கு மீண்டும் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.