கண்ணீர் கரிப்பான அந்த 2004 ஜூலை 16-ஐ தமிழகத்தால் மறக்கவே முடியாது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் பிடித்த நெருப்பு, 94 குழந்தைகளைத் துடிக்கத் துடிக்கத் தின்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் தேம்பவைத்தது.
10 வருடங்களாய் இழுபட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 30-ந் தேதி வழங்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் அனைவரும் ‘பாதிக்கப்பட்ட குழந்தைகள் நினைவுக் காலனி’என்ற குடியிருப்பை குடந்தை பைபாஸ் சாலை அருகே உருவாக்கிக் கொண்டு, அங்கே சோகச் சுமையோடு வாழ்ந்து வருகிறார்கள். தீர்ப்புக்காக இத்தனை ஆண்டுகளாய்க் காத்திருந்த அவர்களும், அவர்களின் உறவினர்களும், அந்தத் தீவிபத்தில் சிக்கி, பலத்த காயத்தோடு உயிர் தப்பிய குழந்தைகளும் அன்று அதிகாலை 4 மணிக்கே, அந்தக் குடியிருப்பின் மத்தியில் இருக்கும் விநாயகர் கோயிலில் கூடினர்.
காவல்துறையினரும் பத்திரிகையாளர்களும் பொதுமக்களும்கூட ஆர்வத்தோடு கூடியதால் நீதிமன்ற வளாகமே பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. நீதிமன்ற ஆசனத்தில் சரியாக காலை 11.30-க்கு வந்து அமர்ந்தார் நீதிபதி முகமது அலி. அவர்முன் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரையும் ஆஜர்படுத்தினர். அவர்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட கல்வி அதிகாரி நாராயணசாமி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், நகரமைப்பு அலுவலர் முருகன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேர்மீதும், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி, முதலில் அவர்களை விடுதலைசெய்தார் நீதிபதி.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் மீதமுள்ள 10 பேரும், கலக்கத்தோடு உட்கார்ந்திருக்க, அவர்களில் தலைமை ஆசிரியை சாந்தலெட்சுமி அழுதுகொண்டேயிருந்தார். பின்னர் நீதிபதி முகமதுஅலி, இந்த 10 பேரையும் பார்த்து "உங்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?' என்று கேட்க, 10 பேரும், "நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை' என்று கோரஸாகக் கூறினர். இரண்டு மணி நேரம் தீர்ப்பை ஒத்தி வைத்து விட்டு நீதிபதி கிளம்பினார். இதனால் எதிர்பார்ப்பு பன்மடங்கானது. மீண்டும் 1.40-க்கு தீர்ப்பை வாசித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட பள்ளி நிறுவனர் பழனிச் சாமிக்கு, இறந்த ஒரு குழந்தைக்கு 10 ஆண்டு வீதம் மொத்தம் 94 குழந்தைகளுக்கும் 940 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி, கூடவே 47 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தார். தாளாளர் சரஸ்வதி, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சத்துணவு உதவியாளர் வசந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரடி உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், கட்டிட பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் விதித்தார்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களும் உறவினர்களும் கண்ணீர்விட்டு அழுதனர். அவர்களில் சித்ரா, இலக்கியா, மதுமிதா, தட்டுவண்டி சேகர், இன்பராஜ் ஆகியோர் ""நீதி வெல்லும்ன்னு காத்திருந்தோம். ஆனா இங்க நீதி சாகடிக்கப்பட்டிருக்கு. எங்க பிள்ளைகள் சாகக் காரணமா இருந்த லஞ்ச அதிகாரிகள் விடுதலையாயிட்டாங்க. நீதி பதியோ இந்த அதிகாரிகள் மீதான குற்றம் நிரூபிக்கப் படலைன்னு சொல்றார். அப்படின்னா என்ன அர்த்தம்? குற்றத்தை நிரூபிக்காம அரசாங்கம் எங்களை ஏமாற்றி யிருக்கு. பள்ளிக்கூட தரப்பு கொடுக்கும் லஞ்சத்துக்காக, அந்தப் பள்ளியை இயங்க அனுமதிச்ச பெரிய லெவல் அதிகாரிகளை எல்லாம் விட்டுட்டு, அவங்களுக்கு பணத்தை வாங்கிக்கொடுத்த சின்ன லெவல் அதிகாரிகளையும் உதவியாளர்களையும் தண்டிச்சிருக்காங்க. இது அநீதி. இதை எங்க பிள்ளைகளின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது'' என்றார்கள் வழிந்த கண்ணீரோடு ஆவேசமாக.
குற்றம் சாட் டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான ராமநாதன் ""குற்றம் சுமத்திய அரசுத் தரப்பால், அந்தக் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. அதனால்தான் 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்வார்கள்''’என்றார்.
பெற்றோர்களின் உணர்வை, அரசு வழக்கறிஞர் மதுசூதனனிடம் நாம் சொன்னபோது, ""அப்படி சொல்லிவிட முடியாது. நாங்கள் வைத்த வாதத்தின் அடிப்படையில்தான், நான்கு அரசு ஊழியர்களுக்கு தண்டனை கிடைச்சிருக்கு. உயர் அதிகாரிகளும் ஆசிரியைகளும் தப்பி விட்டது உண்மைதான். தண்டனையிலிருந்து தப்பிய 11 பேரும் குற்றவாளிகள்தான் என்பதற்கு சரியான சாட்சியங்கள் எங்களிடம் இருந்தும், அதை சரிவர கவனிக்க நேரமின்மையால் நீதிபதி இப்படியொரு தீர்ப்பை வழங்கிவிட்டார். நிச்சயம் மேல்முறையீடு செய்து, அவர்களுக்கும் தண்டனை வாங்கித் தருவோம்''’என்றார் அழுத்தமாய்.
விடுவிக்கப்பட்ட அந்த 11 பேரும், அந்த கொடூர தீவிபத்துக்கு எந்த வகையில் காரணமாக இருந்தார்கள்? அவர்கள் மீது அரசுத்தரப்பு வைத்த குற்றச்சாட்டுக்கள் என்ன? என்று கேட்டோம். அரசு வழக்கறிஞர் தரப்போ ""மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட கல்வி அதிகாரி நாராயணசாமி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகிய ஆறுபேரும் கல்வித்துறை அதிகாரிகள் ஆவார்கள். இவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பள்ளிகளைப் பார்வையிட்டு, கட்டிடத் தரம், மாணவர்களின் வசதி போன்றவற்றை ஆய்வுசெய்து மாவட்ட ஆட்சியரிடம் ரிப்போர்ட் செய்யவேண்டும். ஆனால் அடிக்கடி ஆய்வுக்கு போனவர்கள் அது குறித்து உண்மை ரிப்போர்ட்டை தாக்கல் பண்ணவில்லை. காரணம் பள்ளியிடம் லாபமடைந்திருக்கிறார்கள். இதையும் நீதிமன்றத்தில் நிரூபணம் செய்தோம். சாட்சியங்களையும் கொண்டுபோய் நிறுத்தினோம்.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று மாலையே, தஞ்சை கடைவீதியில் அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீர்ப்புக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப் பாட்டத்தில் பேசிய பலரும் ""குற்றவாளிகள் 24 பேரில் மூன்றுபேரை முன்பே வழக்கில் இருந்து தள்ளுபடி செய்திருப்பதும், தற்போது 11 பேரை விடுதலை செய்திருப்பதும் உள்நோக்கம் கொண்டது. தவறு செய்த அரசு அதிகாரிகளை இந்த அரசாங்கம் காப்பாற்றும் நோக்கத்திலேயே இதைச் செய்திருக்கிறது'' என்றார்கள் காட்டமாய்.
மரணக் கவிதைகளாய் ஆன அந்த 94 குழந்தைகளின் ஆன்மா சாந்தி யடையுமா?
-பகத்சிங், செல்வகுமார்