ஜிஹாதிஸ்டுகளுக்கான இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பேசியுள்ள அல்கய்தா தலைவர் அய்மான் அல் ஜவஹிரி, "அல்கய்தா அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும். இஸ்லாமியர்களை பிரித்து வைத்துள்ள எல்லைகளை அல்கய்தா அமைப்பு ஒன்றிணைக்கும்.
இந்தியாவில் செயல்படும் தங்கள் இயக்கம் பர்மா, பங்களாதேஷ், அஸ்ஸாம், குஜராத், அகமதாபாத் மற்றும் காஷ்மீரில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்தும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும். மேலும், மியான்மர் மற்றும் வங்கதேசத்திலும் தாங்கள் போர் தொடுப்போம்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் கடந்த 1965ஆம் ஆண்டு நடந்த போரில் இந்திய விமானப்படை ஆற்றிய பங்கு குறித்த கருத்தரங்கு இன்று (5ஆம் தேதி) டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அல்கய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயராக உள்ளது'' என்றார்.