வன்னிப் பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் கோரிய ஆசிரியர்கள் இன்று வடமாகாணக் கல்வி அமைச்சை முற்றுகையிட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சிறையிட்டனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது.
இன்று காலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சில் ஒன்று கூடிய வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றி இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக இன்றைய தினம் இடமாற்றக் கடிதம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் வடமாகாணக் கல்வி அமைச்சை வலியுறுத்தி அமைச்சின் கதவுகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சின் நுழைவாயிலை அடைத்த ஆசிரியர்கள் வாயிலில் அமர்ந்து கொண்டனர்.
உள்ளே கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும், மாகாணசபை உறுப்பினர் கஜதீபனும் அகப்பட்டதோடு, கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் அகப்பட்டுக் கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாக அங்குள்ள ஆசிரியர் ஒருவருடன் தொடர்புகொண்ட போது,
ஒரு மாகாண சபை உறுப்பினர் எமக்கு வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது தொட்டிலை ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுகின்றார் என்று கூறினார்.
இதைவிட கல்வி அமைச்சு அதிகாரிகள் விழாக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆசிரியர்கள், மாணவர்களின் விடயங்களுக்குக் கொடுப்பதில்லை என இன்னுமொரு ஆசிரியர் விசனம் தெரிவித்தார்.
இன்றும்கூட ஒரு கல்விப் பணிப்பாளரின் மணிவிழாவுக்காக கல்வி அமைச்சு அதிகாரிகள் அனைவரும் கடமை நேரத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேறினர் என்ற செய்தியும் ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.