கடந்த முறை டெல்லி முதல்வராக பதவியேற்ற 45 ஆவது நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், இந்த முறை முதல்வராக பதவியேற்ற சுமார் 20 நாட்களுக்குள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த கெஜ்ரிவால், ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகளைக் கவனிக்க முடியவில்லை. நான் டெல்லி மக்களுக்கு சேவை செய்வதையே விரும்புகிறேன். எனவேதான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
புதிய ஒருங்கிணைப்பாளர் யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் பிரசாந்த் பூஷண், கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோர், கட்சியில் கெஜ்ரிவால் முன்னிலைப்படுத்துவது குறித்து அதிருப்தி அடைந்தனர். கட்சியின் பாராளுமன்ற விவகார குழுவிடம் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் பதவி விலகல் கடிதம் அளித்தனர் என்றும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது