புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2024

ஆட்சிக் கதிரையில் அநுர குமார திரைக்குப் பின்னால் ரில்வின் சில்வா மூக்கணாங்கயிறு யார் கையில்?

www.pungudutivuswiss.com
அநுர குமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று
நூறு நாட்கள் ஆகிறது. ஆட்சிக் கதிரையில் இவர் இருந்தாலும்
தாய்க்கட்சியான ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வாவே திரைக்குப் பின்னால் நின்று காய்களை நகர்த்துகிறார். ஒரே பாதையில் இரண்டு வண்டிகளும் ஓடுவதுபோல் தெரிந்தாலும் ஒன்றுடன் ஒன்று உரசுப்படும் சாத்தியம் இல்லாமலில்லை.
எந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதன் முதல் நூறு நாட்கள் முக்கியமாகப் பார்க்கப்படும். இலங்கையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்திய மாக்சிஸ ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸநாயக்க பதவியேற்று இந்த வாரத்துடன் நூறு நாட்கள் முற்றுப்பெறுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா அல்லது எதையாவது செய்யக்கூடிய வகையில் வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறதா என்று திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது.
ஊழல் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு (யவெi உழசசரிவழைnஇ யவெi pழஎநசவல) என்ற இரண்டுமே இவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மகுட வாசகங்களாக அமைந்து வாழ்வாதாரம் தேடிய மக்களை இவர் பக்கம் திரும்ப வைத்தது.
முக்கியமாக - ராஜபக்சக்களின் ஆட்சிக் காலமே ஊழலின் உச்சக்கட்டமாக தேர்தல் காலத்தில் காட்டப்பட்டது. இதனை அடிநாதமாக வைத்தே காலிமுகத் திடலில் அரகலய போராட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டது. இதில், அநுர குமாரவின் தாய்க்கட்சியான ஜே.வி.பி. பிரதான பங்கு வகித்தது.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைத் துறந்தது, ராஜபக்ச குடும்ப உறவுகள் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளைக் கைவிட்டது என்ற வரிசையில் ஜனாதிபதியாகவிருந்த கோதபாய ராஜபக்ச கடல் வழியாகத் தப்பி ஓடி, நாடோடியாக பல நாடுகளைத் தஞ்சம் புகுந்து, இறுதியாக வெளிநாடொன்றில் தங்கியிருந்தவாறு தமது பதவியை துறக்க நேர்ந்ததில் ஜே.வி.பி.யினருக்கு பிரதான பங்குண்டு.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இடைக்கால ஜனாதிபதியாகிய ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயக ரீதியாக தோற்கடித்து வீடேக வைத்தது ஜே.வி.பி.யின் மறுஅவதாரமான என்.பி.பி. என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி.
இதன் தலைவரான அநுர குமார சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, சோசலிஸ மாணவர் அமைப்பின் தலைவராகி, சில காலம் இலங்கையில் அமைச்சர் பதவியும் வகித்து இப்போது ஜனாதிபதியாகியுள்ளார்.
தமிழக சினிமாவில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தபோது ஷஎங்கள் அயல்வீட்டுப் பொடியன்| என்றவாறான கவர்ச்சி ஏற்பட்டதுபோல அநுர குமாரவின் உடை, உரை, நடை, அனைவரையும் அரவணைக்கும் வசீகரம் என்பவை மக்கள் மனதில் அவரை இலேசாக புகவைத்தது. ரஜினிகாந்தின் சினிமா வெற்றியும் அநுர குமாரவின் அரசியல் வெற்றியும் பார்வைக்கு ஒன்றாயினும் நடைமுறையில் வித்தியாசமானவை. முன்னவரது நடிப்பு, பின்னவரது அவ்வாறிருக்க முடியாது. தனது முதல் நூறு நாட்களில் அநுர குமார தனது பாதையில் வெற்றி பெற்றாரா?
ஊழல் ஒழிப்பது என்ற பதாதையின் அர்த்தம் முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல்களை கண்டுபிடித்து தண்டனை வழங்குவது என்பதாக மட்டும் இருக்க முடியாது. தங்களின் ஆட்சியில் ஊழல் எட்டிக்கூடப் பார்க்காது விழிப்பாக இருக்க வேண்டும்.
ஊழல் என்பது நிதி மோசடி, கையாடல், கையூட்டல், வெளிநாடுகளில் பணம் பதுக்குவது, கமி~ன் பெறுவது என்பது மட்டுமல்ல. மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் தங்கள் பெயர்களின் முன்னாலும் பின்னாலும் போடும் பட்டங்களை இனாமாகவும், பணம் கொடுத்தும் பெற்று மக்களை ஏமாற்றக்கூடாது. அவ்வழி பார்க்கின் அநுர குமாரவின் அமைச்சரவையில் பலர் கற்றுப் பெறாத பல பட்டங்களை தேர்தல் காலங்களில் தங்கள் பெயருடன் இணைத்து ஒரு பிம்பத்தை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டவர் முதலில் இந்த விடயத்தில் சிக்கி பதவியைத் துறக்க நேர்ந்துள்ளது. இவர் போன்று மேலும் பலர் பட்டங்களைச் சுமந்தவாறு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
தேர்தல் காலங்களில் உறுதியளிக்கப்பட்ட சில விடயங்களுள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்தல், மகிந்த குடும்பத்தினர் பதுக்கி வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை மீட்டெடுத்தல், குற்றவாளிகளை பாரபட்சமின்றி சட்டத்தின் முன்னால் நிறுத்துதல், கோதபாய ஆட்சியின்போது இயற்கை உரத்தை விநியோகிக்க மேற்கொண்ட திட்டத்தை விசாரித்தல், ரணிலின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதை விசாரித்தல், மத்திய வங்கி நிதி மோசடி சம்பந்தப்பட்டவர்களை நாட்டுக்கு மீளக் கொண்டு வருதல் என்று சொல்லப்பட்டவைகள் எதுவும் ஆரோக்கியமாக முன்னெடுக்கப்படவில்லை. ஊடகங்களுக்கு செய்திகளாக மட்டுமே இவை கிடைக்கப்பெற்று வருகின்றன.
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வரி குறைப்பு, நிலையான பொருளாதார கட்டமைப்பு என்று சொல்லப்பட்டவையும் தேக்கத்தில் உள்ளன. முன்னைய ஆட்சியாளர்கள் போல எடுத்ததற்கெல்லாம் விசாரணைக்குழு, கமி~ன் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சனைகள் வேதாளம் மீண்டும் மரமேறிய கதையாகவுள்ளது. ஆயிரக்கணக்கான நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்துக்கு நியாயமான பதில் இல்லை. 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தம் பிரசவித்த மாகாண சபைத் தேர்தலுக்கு காலம் பின்போடப்படுகிறது. 13ம் திருத்தம் பற்றி உத்தரவாதம் ஏதுமில்லை. புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சனைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு காணப்படுமென்று சொல்லப்பட்டது. இதற்கு மூன்றாண்டுகள் செல்லலாமென இப்போது சொல்லப்படுகிறது.
ஆகப்பிந்திய அமைச்சரவை முடிவின்படி நாடு முழுவதுமுள்ள அரச கட்டமைப்புகளை ஒன்றிணைக்க ஏற்பாடாகி வருகிறது. 81 அரச திணைக்களங்கள், 25 மாவட்ட நிர்வாக அலகுகள், 339 பிரதேச செயலர் அலுவலகங்கள், 340 வரையான கூட்டுத்தாபனங்கள் - சபைகள், 1110 வரையான பொது நிறுவனங்களால் வருடத்துக்கு 140 மில்லியன் செலவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவைகளை சோசலிஸ நாட்டுப் பாணியில் இணைத்துக் குறைக்க யோசிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க அரசினால் பின்போடப்பட்ட உள்;ராட்சிச் சபைத் தேர்தல்களை முன்னர் அறிவித்ததுபோல 2025 முற்பகுதியில் நடத்தாது ஏப்ரல் வரை பின்போட முடிவாகியுள்ளது.
முதல் நூறு நாட்களில் அநுர குமாரவின் மிகப்பெரிய சாதனை அயல்நாடான இந்தியாவுக்கு மேற்கொண்ட குறுகிய விஜயம். ஜனாதிபதியான பின்னரான இவரது முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். ஆடம்பரமற்ற உடையில் வழமையான பாணியில் அங்கு சென்ற அநுர குமாரவுக்கு ஆடம்பரமான வரவேற்பு வழங்கி குளிர வைத்தார் இந்திய பிரதமர் மோடி. இலங்கை ஜனாதிபதியை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வது போன்ற வரவேற்பு வழங்கப்பட்டது. அநுர குமாரவின் தோளில் தமது கைகளைப் போட்டவாறு பிரதமர் மோடி நடைபயின்ற படத்துக்கு நல்ல கிராக்கி.
'நீ ஒரு சின்ன பெடியன், நான் சொல்வதைக் கேள்" என்று கூறுவது போன்ற பாணியில் இந்த ஒளிப்படம் விளக்கம் தருகிறது. 1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன - ராஜிவ் காந்தி ஒப்பந்தம் செய்யப்பட்ட வேளையில் அரசியலில் ஒரு மாணவனாக ஜே.வி.பி.யில் இணைந்தவர் அநுர குமார. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட ராஜிவ் காந்தி கொழும்பு சென்றபோது ராஜிவின் வயது ஜே.ஆரின் அரசியல் அனுபவ வயதுக்கும் குறைவானது என்று பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை, அநுர குமாரவின் தோளில் மோடி கைபோட்டவாறு நடந்த படம் ஞாபகப்படுத்தியது.
அநுர குமாரவின் முதல் நூறு நாட்களில் அதிமுக்கியமான ஒன்றாக பளிச்சிடுவது ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஏற்றிருக்கும் வகிபாகம். 13ம் திருத்தத்துக்கு இடமில்லையென்றும் மாகாண சபைகள் ஒழிக்கப்படுமென்றும் சில நாட்களுக்கு முன்னர் இவர் பகிரங்கமாகத் தெரிவித்ததை இதுவரை அநுர குமார தரப்பு மறுக்கவில்லை.
1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இரத்தக் களரி ஏற்படுத்தியவர்கள் ஜே.வி.பி.யினர் என்பது வரலாறு. வடக்கும் கிழக்கும் இணைந்ததாக தமிழர் தாயக மாகாண சபை இருக்கக்கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று சட்டரீதியாக அதற்குத் தடை பெற்றவர்கள் ஜே.வி.பி.யினர் என்பதும் வரலாறு. ஆதலால் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் கூறுவது அவரது அமைப்பின் கொள்கை ரீதியான முடிவாகவே இருக்கும்.
இதனூடாக ஒன்று புலப்படுகிறது. ஆட்சிக் கதிரைக்கு தலைவராக இருப்பவர் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுர குமார திஸ்ஸநாயக்க. திரைக்குப் பின்னால் நின்று ஆட்சியை நெறிப்படுத்துபவர் தாய்க்கட்சியின் பொதுச்செயலாளரான ரில்வின் சில்வா. ஆரம்பத்தில் இரண்டு வண்டிகளும் அருகருகே செல்வதாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று உரசுப்படும் சாத்தியம் இல்லாமல் இல்லை.
Gefällt mir
Kommentieren
Senden
Teilen

ad

ad