நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் வழியில், மதுரைக்கு சென்று பா.ஜ.க நகர நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராரதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, "பா.ஜ.கவிற்கு மாபெரும் இமாலய வெற்றியை அளித்த மக்களுக்கு எங்களது கட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு முன்னர் இருமுறை பா.ஜ.க வெற்றி பெற்ற போதும் பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்த அரசால் பல சாதனைகளை செய்ய முடியாமல் போய்விட்டது.
ஆனால் மோடி தலைமையில் அமையும் அரசு இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் அமையும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மிகப்பெரும் வெற்றி நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த வெற்றி. இங்கு கன்னியாகுமரியிலும், தருமபுரியிலும் வெற்றி பெற்றதற்கு மோடி அலையே காரணம்.
இருந்தாலும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவின் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் யுக்தி பா.ஜ.கவின் வெற்றியை தடுத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகத்திறன்தான். அவரது திறமையான செயல்பாடுகளும் தேர்தல் பிரசார யுக்திகளும்தான் அ.தி.மு.க கட்சிக்கு பெரிய வெற்றியை அளித்துள்ளன. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக தோல்விக்கு அக்கட்சி ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுதான் முக்கிய காரணம்" என்றார்.