கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா? இல்லையா?
அமைச்சரவையை அமைப்பதில் பா. ஜ. கட்சிக்கு சங்கட நிலை
மூத்த தலைவர்களில் யார் யாருக்கு முக்கிய பொறுப்புக்கள்?
நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பா. ஜ. கட்சி. நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால் அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்
என்று தெரிகிறது. மூத்த தலைவர்களில யார் யாருக்கு என்ன பதவி தருவது, கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா வேண்டாமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
ஆனால் கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களை விட மோடி இளையவர். அவர் பிரதமர் பதவியேற்க உள்ளதால் மூத்த தலைவர்களில் யார் யாருக்கு என்னென்ன பதவி தரப் போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்வானிக்கு என்ன பதவி என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை ஏற்பேன் என்று அத்வானி கூறியுள்ளார்.
அனேகமாக அவருக்கு துணை பிரதமர் பதவியும். உள்துறையும் வழங்கப்படலாம் என்று செய்தி வெளியானது. ஆனால் மோடியின் கீழ் துணை பிரதமராக அத்வானியை நியமிப்பது சரியாக இருக்காது என்பதால் அவரை சபாநாயகராக்க பா. ஜ. மேலிடம் ஆலோசிப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன. மேலும் உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை ஆகிய முக்கிய நான்கு இலாகாக்களில் ஒன்றை சுஷ்மா சுவராஜ் எதிர்பார்க்கிறார்.