தமிழக காங்கிரஸில் அமுங்கிக்கிடந்த கோஷ்டி கானங்கள், தற்போது பகிரங்கமாக வெடிக்கத் துவங்கிவிட்டன. இதிலுள்ள பின்னணிகளோ செம ரகளை!
காங்கிரஸ் தமிழகத் தலைவராக வாசன் ஆதரவாளர் ஞானதேசிகன் இருக்கிறார். தேர்தல் தோல்வியை முன்னிறுத்தி தலைமைப் பதவியை கைப்பற்ற துடிக்கிறார் ப.சிதம்பரம். இதன் முதல் கட்டமாக, சிதம்பரத்தின் ஆதரவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் என 32 பேர் கையெழுத்திட்டு, "தமிழக தலைமையை மாற்றுங்கள்' என சோனியாவுக்கும் ராகுலுக்கும் புகார் அனுப்பினர். மேலும், "நடந்துமுடிந்த தேர்தலில் தமிழகத்தில் 4.31 சதவீத வாக்குகள் பெற்று மிக மோசமாக தோற்றதற்கு தமிழக தலைவர் ஞானதேசிகனே காரணம். தோல்விக்குப் பொறுப்பேற்று ஞானதேசிகன் பதவி விலக வேண்டும்' என 32 பேரும் கூட்டறிக்கை வெளியிட்டு போர்க்குரல் எழுப்ப... டெல்லிவரை இது எதிரொலித்தது.
இதனை ஜீரணிக்க முடியாத வாசன், இதற்கு பதிலடி தரவேண்டுமென ஞானதேசிகனிடம் கலந்தாலோசித்தார். இந்த விவகாரத்தில், சிதம்பரம் சம்பந்தப்பட்டிருப்பதால், கூட்டறிக்கைக்கு தனது ஆதரவாளர்களை மட்டும் கொண்டு பதிலடி தந்தால் எஃபெக்ட் இருக்காது என யோசித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்திநடராஜன், பிரபு உள்ளிட்டவர்களோடு பேசினார் வாசன். அவர்களும் சம்மதிக்க வாசன், இளங்கோவன், ஜெயந்திநடராஜன், பிரபு ஆதரவாளர்கள் 34 பேரின் கூட்டறிக்கையை வெளியிட வைத்தார் வாசன். அதில், "நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும், விலைவாசி உயர்வும்தான் காங்கிரஸுக்கு தோல்வியை தந்தது. அந்த வீழ்ச்சிக்கு காரணமானவர் ப.சிதம்பரம்தான். தெலுங்கானா பிரிவினைக்கு வித்திட்டு பலமான காங்கிரஸை பலவீனமாக்கியதும் அவர்தான்' என கடுமையாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இப்படி தமிழக காங்கிரஸார் அறிக்கைப் போர் நடத்துவதைக் கண்டு கடும் கோபத்தில் இருக்கிறது டெல்லி.
ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களில் மிக முக்கியமானவரான தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், இந்த பொருளாதார சரிவு, தெலுங்கானா விவகாரங்களை மறுப்பதோடு தெலுங்கானா பிரிப் புக்கு தெலுங்கானாவுக்கு காங்கிரஸ் தலைமையும் ஒப்புதல் தந்திருக்கிறது. அப்படியானால் அன்னை சோனியாவை இவர்கள் விமர்சிக்கிறார்களா? என்று தான் கேள்வி எழுகிறது. எல்லாவற் றுக்கும் மேலே, தென்சென்னையில் துவங்கி 15-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதியில் பொதுக் கூட்டம் வாயிலாக பலமணி நேரம் பிரச்சாரம் செய்தவர் சிதம்பரம். அவரது பிரச்சாரம் அழுத்தமாக மக்களிடம் போய்ச் சேர்ந்ததால்தான் கலைஞர், மோடி, ஜெயலலிதா, ராஜ்நாத்சிங், பிரகாஷ்காரத் என பலரும் சிதம்பரத்தின் கேள்விகளுக்கு ரியாக்ஷன் காட்டினார்கள். வேறு எந்த காங்கிரஸ் தலைவர்களுக் கும் இப்படி ரியாக்ஷன் வரவில்லை. இதி லிருந்தே தேர்தல் நேரத்தில் யார் அதிகம் உழைத்தது என்று தெரிந்து கொள்ளலாம்'' என சுட்டிக்காட்டுகிறார்.
இந்த அறிக் கைப் போர் எதற்காக உருவா னது என டெல்லி தலைவர்களோடு தொடர்பில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் பேசியபோது, ""தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்ட சிதம்பரமும், வாசனும், எம்.பி. பதவி இல்லாமல் இருக்க முடியவில்லை. கர்நாடகாவில் காலியாகும் ராஜ்யசபாவின் 4 இடங்களுக்கு இந்த மாதம் தேர்தல் நடக்கிறது. கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் 2 எம்.பி.க்களை எளிதாக பெற்றுவிடும். மீதி யுள்ள எம்.எல்.ஏ.க்களோடு தேவ கௌடாவின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால் இன்னொரு எம்.பி. சீட்டை காங்கிரஸ் பிடித்து விட முடியும். ஸோ, கர்நாடகா விலிருந்து ராஜ்யசபா எம்.பி. யாக இருவருமே கடும் முயற்சி எடுத்தனர். இதில் வாசனுக்கு ஆரம்பத்திலேயே ரெட் சிக்னல் கொடுத்துவிட்டார் சோனியா. மோடி அரசை எதிர் கொள்ள ராஜ்யசபாவில் வலிமையான லீடர் தேவை என்பதால் சிதம்பரத்தின் முயற்சிக்கு க்ரீன் சிக்னல் கிடைக்க, வாசனுக்கு அதிர்ச்சி.
சிதம்பரத்தின் எதிரியான பிரணாப் முகர்ஜி மற்றும் திக்விஜய்சிங்கின் உதவியை கோரினார் வாசன். அவர்களோ கர்நாடக முதல்வர் சித்த ராமையாவிடம் பேச, அவரோ "சிதம்பரத்தை ஏற்க மாட்டோம்' என மேலிடத்திற்கு தகவல் அனுப்பிய தோடு சிதம்பரத்தை எதிர்ப்பதாக அறிக்கை தந்தனர். இதனால் சிதம்பரத்தின் ராஜ்யசபா கனவு பணால் ஆகிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் வாசன் என அறிந்ததால், தமிழக தலைமையை வாசன் தரப்பிடமிருந்து கைப்பற்ற சிதம்பரம் எடுத்த ஆயுதம்தான் ஞானதேசிகனுக்கு எதிரான கூட்டறிக்கை.
இந்தச் சூழலில், "ஞானதேசிகனை மாற்ற வேண்டும்' என பீட்டர் அல்ஃபோன்ஸ், மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர் என பலரும் ராகுல்காந்தி யிடம் காய் நகர்த்தி வருகின்றனர். சோனியாவும் தமிழக தலைமையை மாற்றிட ஆலோசித்து வருகிறார். இதையறிந்து, அகமதுபடேல், மோதி லால் ஓரா மற்றும் ஆஸ்கர்ஃபெர்ணாண்டஸ் மூலமாக, "ஞானதேசிகனை மாற்றுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், தலைவர் பதவி எனக்குத்தான் தர வேண்டும்' என்கிறார் வாசன். ஆனால், சோனியாவும் ராகுலும் வாசனுக்கு வாய்ப்புத்தர விரும்பவில்லை.
ஆக... ராஜ்யசபா சீட் கனவு நிறைவேறாததால் தமிழக தலைவர் பதவியை குறிவைத்து சிதம்பரமும் வாசனும் முட்டி மோதுவதில் வெடித்ததுதான் இந்த அறிக்கை யுத்தம்'' என விவரித்தனர்.