பீகார் முதல் அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் சரத்யாதவ் அறிவித்துள்ளார்.
பீகார் முதல் அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சிக்கும், கட்சியின் மூத்த தலைவர்கள் சரத்யாதவ், நிதிஷ்குமார் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி ஜித்தன்ராம் மஞ்சிக்கு நெருக்கடி தரப்பட்டது.
இதையடுத்து ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், முதல் அமைச்சராகவும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும், துணை முதல் அமைச்சர் பதவி வழங்கினால் நிதிஷ்குமாரை ஆதரிப்பதாகவும் ஜித்தன் ராம் மஞ்சி தெரிவித்தார்.
233 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில், 128 பேர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஜித்தன் ராம் மஞ்சிக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.