எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இலங்கை கடற்பரப்புக்குள்ளேயோ அல்லது நிலப்பரப்புக்குள்ளேயோ அனுமதி இன்றி நுழைவதற்கு அனுமதிக்க முடியாது.
அவ்வாறு நுழைவதானது சட்டவிரோத நடவடிக்கை என்பதுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என அமைச்சர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கும், தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 83 நாட்கள் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை. இவை அப்பட்டமான பொய் என்பதுடன், இலங்கையின் கடல் எல்லைக்குள் வேறுநாட்டவரை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான தீர்மானத்தை மீனவப் பிரதிநிதிகள் எடுக்க முடியாது. இது தொடர்பான தீர்மானத்தை அரசாங்கமே எடுக்க முடியும் என்றும் பதில் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் கடந்த காலத்தில் 120 நாட்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். தற்பொழுது அதனை 83 நாட்களாகக் குறைத்துள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் எவரும் அனுமதி இன்றி உள்நுழைய முடியாது என்பதே எமது தெளிவான நிலைப்பாடாகும்.
இந்தியாவுடன் இலங்கை நட்புறவைப் பேணிவந்தாலும், இலங்கையின் கடல் எல்லை மற்றும் நில எல்லைக்குள் அத்துமீறு நுழைவது தொடர்பான விடயத்தில் அரசாங்கம் கண்டிப்பாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.