
இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களை விட, தமிழ் மக்களுக்கே அதிகளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் அரசியல் தீர்வு காண்பதற்கு முன்பதாக, நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று மதியத்தின் பின்னர் முப்படையினருடன் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தினார்.
பலாலி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத்தினருடன் மதிய போசன விருந்து அருந்தினார். அதன் பின்னர், பலாலியில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையகத்திற்குச் சென்று, விமானப்படையினருடன் கலந்து ரையாடல் நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறையில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்திற்குச் சென்றார். அங்கு, கடற்படையினருடன் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பின்னர், கீரிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சென்று பார்வையிட்டிருந்தார். இறுதியாக, முப்படையினர் மற்றும் பொலிஸாரைப் பலாலி இராணுவத் தலைமையகத்தின் முன்பாகவுள்ள மைதானத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல்களின் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் இனிப் பிரிவினையை ஏற்படுத்த முடியாது. தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதம் இல்லை.
நாட்டில் மீண்டும் ஓர் போர் ஏற்படாது. உயிரிழப்புக்கள் இனித் தேவையில்லை. முன்னைய காலங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமை காணப்பட்டது.
தற்போது அவ்வாறான நிலைமை இல்லை. இதனால் எமது வளங்களைப் பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யலாம். போர் முடிந்தும் இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படவில்லை. இதனால்தான் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. தமிழ் மக்கள் தேசிய நல்லிணக்கத்துக்கு தமது விருப்பங்களை சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் மாத்திரம் வன்முறைகள் இடம்பெறவில்லை. நாடு முழுவதிலும் வன்முறைகள் இடம்பெற்றன. சிங்கள முஸ்லிம் மக்களை விட தமிழ் மக்களுக்கு அதிகளவிலான பிரச்சினைகள் இருக்கின்றன.
ஜெனிவாவில் நாம் வெற்றி பெற்று விட்டோம். இதன் மூலம் எங்களுக்கு உள்ளுர் விசாரணைப் பொறிமுறை அமைத்து, எங்கள் நியாயத்தை நிலைப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாம் நீதியை நிலை நாட்ட வேண்டும். நாம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. நாட்டில் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அதற்கு முன்னதாக அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கியமை அதற்காகத்தான்.
ஐரோப்பிய ஒன்றியம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது தவறு.
இது தொடர்பில் நாம் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தோம். அதற்கமைய மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தோர் பட்டியலில் அறிவித்துள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.