-
28 ஆக., 2020
Jaffna Editorஉறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம் கசிந்தது தகவல் தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத்
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளருமாக இருந்த
வி.மணிவண்ணனை பதவிகளில் இருந்து நீக்குவதாக கட்சியின் மத்திய குழு கடந்த சில
வாரங்களுக்கு முன்னர் சூம் செயலி ஊடாக கூடி தீர்மானம் எடுத்தது. தீர்மானம்
எடுக்கப்பட்டு இரு தினங்களுக்கு பின்னரே தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரால்
உத்தியோக பூர்வமாக கடிதம் மூலம் தமது தீர்மானம் குறித்து மணிவண்ணனுக்கு
அறிவிக்கப்பட்டது. கட்சியின் பதவிகளில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டமை தொடர்பாக
கடும் சர்ச்சைகள் எழுந்தன. மணிவண்ணனுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் குரல்
கொடுத்தனர். இதனால், கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலைமை தோன்றிய போதிலும் பலரும்
கட்சி பிளவுபடாது ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என விரும்பி தலைவருடன் பேச்சுக்களை
நடத்திய போதிலும் , கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் எந்த சமரசத்திற்கும் உடன்படாத நிலையில் சர்ச்சை நீடித்தது.
இந்நிலையில், கடந்த 22ஆம் திகதி மணிவண்ணன் ஊடகவியலாளர் சந்திப்பினை
நடத்தியிருந்தார். அதில், “எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு
எதிரானது, இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் கட்சியின் தேசிய
அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன்” எனத்
தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் மத்திய குழு சூம் செயலி ஊடாக கூடி மணிவண்ணனை
தற்காலிகமாக உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. இதேவேளை, மணிவண்ணனுக்கு ஆதரவாக
செயற்படும் உள்ளூராட்சி உறுப்பினர்களை பதவி விலகுமாறும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு
வருவதாக நேற்றைய தினம் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. எனினும்,
உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக தனக்கு உத்தியோகபூர்வமாக இன்னமும்
அறிவிக்கப்படவில்லை என சட்டத்தரணி வி.மணிவண்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது
தெரிவித்தார்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com