பாகிஸ்தான் விமானப் பணியாளர்கள் மாயம்?
பாகிஸ்தானிலிருந்து கனடா சென்ற விமானம் ஒன்று கனடாவின் ரொரன்றோ Pearson சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த விமானத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் மாயமானதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

அந்த விமானத்தின் விமானிகள் உட்பட அனைத்து விமானப் பணியாளர்களும் கனடா அதிகாரிகளிடம் சரணடைந்ததாகவும், கனடாவில் புகலிடம் கோரியுள்ளதாகவும் சமூக ஊடகமான எக்ஸில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆகவே, கனடா சென்ற பாகிஸ்தான் விமானத்தை பாகிஸ்தானுக்கு திருப்பிக் கொண்டு வருவதற்காக புதிதாக விமானிகள் கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு இனி நேரடி விமான சேவை கிடையாது என்றும் அந்த செய்தி கூறுகிறது.
உண்மை நிலவரம் என்ன?
ஆனால், பாகிஸ்தான் விமானப் பணியாளர்கள் குறித்த இந்த செய்தியை உறுதி செய்ய இயலவில்லை என கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானுக்கும் கனடாவுக்குமிடையில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன விமானம் ஒன்று, வாரத்துக்கு ஒருமுறை இயங்குவதை, Pearson சர்வதேச விமான நிலைய இணையதளமும் உறுதி செய்கிறது.
விடயம் என்னவென்றால், இதற்கு முன், 2024ஆம் ஆண்டில், ரொரன்றோ வந்தடைந்த பாகிஸ்தான் சர்வதேச விமானப் பணியாளர்கள் சுமார் எட்டு பேர் மாயமாகியுள்ளார்கள்.
அவர்களில் இரண்டு பேர் கனடாவில் புகலிடம் கோரியுள்ளதாக புலம்பெயர்தல் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| . |
