சவாலான இலக்கை சுதாகரித்தது பங்களாதேஷ்
சிட்டகொங்கில் நடைபெற்றுவரும் போட்டியில் இலங்கை அணி குமார்
சங்கக்காரவின் முச்சதத்தின் மூலம் பங்களாதேஷ் அணிக்கு சவாலான ஓட்டங்களை வழங்கி இருந்தது. ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று 86 ஓட்டங்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்த நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி சுதாகரித்து ஆடியது. 45 ஓட்டங்களுடன் மூன்றாவது நாளை ஆரம்பித்த 'ம்சுர் ரஹ்மான் மற்றும் 36 ஓட்டங்களுடன் களமிறங்கிய இம்ருல் கைஸ் ஆகியோர் தனது கன்னிச் சதம் வரை சென்றனர்.
இதில் ரஹ்மான் 191 பந்துகளில் 11 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 106 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் கைஸ் 218 பந்துகளில் 17 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 115 ஓட்டங்களை குவித்தார்.
இதன்போது இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 232 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இதில் மேற்படி இரு துடுப்பாட்ட வீரர்களும் அஜந்த மெண்டிசின் சுழலில் போல்டானமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் பங்களாதேஷ் அணி 115 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 409 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதில் அஜந்த மெண்டிஸ் ஆரம்பத்தில் விக்கெட் வீழ்த்த தடுமாறியபோது கடைசி நேரத்தில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 27 ஓவர்கள் பந்துவீசிய மெண்டிஸ் 84 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். தில்ருவன் பெரேரா 39 ஓவர்கள் பந்து வீசி 119 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நேர முடிவில் கடைசி வரிசை வீரர்களான மஹ்முதுல்ல 30 ஓட்டங்களுடனும் அமின் ஹொஸைன் மூன்று ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்
இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 587 ஓட்டங்களை பெற்ற நிலையில் பங்களாதேஷ் மேலும் 2 விக்கெட்டுகள் மாத்திரமே கைவசம் இருக்கும் நிலையில் 178 ஓட்டங்களால் பின்னிற்கிறது.
இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.