""ஏம்ப்பா.. இந்த உச்சி வெயிலில் உங்களுக்கு வேற பொழப்பே இல்லையா? அரசியல்கட்சிக்காரங்கதான் மைக்கைக் கட்டிக்கிட்டு கத்திக்கிட்டிருக்காங்க. நீங்க என்னமோ பேப்பரை தூக்கிட்டு வந்து யாருக்கு ஓட்டுன்னு கேட்குறீங்க. யாருக்கு போட்டு என்ன ஆகப்போகுது?'' -இப்படிப் பட்ட விரக்தி குரல்களை நாகை எம்.பி. தொகுதியின் மீனவப் பகுதிகள், விவசாய கிராமங்கள், வணிகர்கள் உள்ள நகர்ப்புற கடைத்தெருக்கள் எனப் பல இடங்களிலும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதிர்ச்சியான ஆச்சரியமாக 50 வயதைத்தாண்டிய ஆண்களும் பெண்களும் நம்மிடம், ""எம்மா காசு தருவீங்க. எப்ப தருவீங்க. யாருக்கு ஓட்டுன்னு கேட்டா மட்டும் போதுமா? காசு கொடுங்க'' என்று தங்களின் மனநிலையைப் பட்டவர்த்தன மாகவே வெளிப்படுத்தினார்கள். அடுத்த அதிர்ச்சி, மாணவப் பருவத்தில் இருக்கும் வாக்காளர்களிடம் சாதி உணர்வுரீதியான அரசியல் பார்வை இருப்பது.
திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் தமிழகத்தில் வேர்ப்பிடித்த கீழத்தஞ்சை மண்ணில் இன்றைய அரசியல் நிலவரம் இப்படித்தான் இருக்கிறது. எனினும், கூட்டணி பலமும் இல்லாமல், பண செல்வாக்கும் இல்லாமல் களம் கண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக அக்கட்சித் தோழர்களும் சி.பி.எம். தோழர்களும் கைகளில் கொடி களைப் பிடித்துக்கொண்டு வீடு வீடாக நடந்துசென்றே வாக்கு சேகரிப்பதை கிராமப்புறங்களில் காண முடிந்தது. கிராமப்புறத்தில் உள்ள அ.தி.மு.க வாக்குவங்கியைப் பலப்படுத்த அமைச்சர் கள் ஜெயபால், காமராஜ் இருவரும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ், பா.ம.க வேட்பாளர்களுக்கு பெரிய ஆதரவில்லை.
நான்காவது முறையாகப் போட்டியிடும் சிட்டிங் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயனுக்கு தி.மு.கவுக்குள்ள வாக்கு வங்கி சாதகமாக இருக்கிறது.