புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012

ஜூனியர் விகடன்
பிரபாகரன்! கொலைகாரன்! திடுக்கிட வைக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜாவின் பேச்சு
வம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
-
நிலத்தை ஆக்கிரமித்தார், ஆளைக் கட்டிவைத்து அடித்தார், கோஷ்டிச் சண்டையை வளர்க்கிறார் என்று நிறையவே குற்றச்சாட்டுகளைச் சந்தித்தவர் இந்த முன்னாள் திமுக அமைச்சர்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு நோக்கத்தை விளக்கவும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பெரியசாமியின் பவள விழாக் கொண்டாட்டமும் இணைந்த தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் நடந்தது.
முதலில் பேசிய பொறுப்பாளர்கள் அனைவரும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற ஈழ ஆதரவுத் தலைவர்களை வறுத்து எடுத்தனர்.
அடுத்துப் பேசிய மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜாவின் பேச்சு, கூட்டத்தினரைத் திகில் அடையவைத்தது.
உலக அளவில் டெசோ மாநாடு இன்று பேசப்படுகிறது. இதை நடத்த கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். கலைஞரின் அனுபவ வயதுகூட அவர்களுக்கு இருக்காது. ஈழத் தமிழருக்காக எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தவர் கலைஞர். பாலசிங்கம், சந்திரஹாசன் போன்றவர்களை நாடு கடத்திய போது அதனைத் தடுத்தவர் கலைஞர்.
ஆனால், ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. எத்தனையோ தி.மு.க-வினர் வீடு எரிக்கப்பட்டது. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.
தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வந்த பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பினோம் என்கின்றனர். அவர் வருவதை கலைஞரிடம் ஒரு வார்த்தை முன்கூட்டியே கூறி இருந்தால், அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பார்.
மாநில அரசு ஒரு வரைமுறைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். விடுதலைப் புலிகளை அழைத்து வந்து நாங்கள் போர்ப் பயிற்சி கொடுத்தோம். ஒரு அ.தி.மு.க-காரன் செய்ததாகச் சொல்ல முடியுமா?
பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே?
வைகோ, திருட்டு தோணி ஏறிப் போனார். ராஜபக்சவைவிட அதிக தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன். ராஜபக்ச, பிரபாகரனைக் கொன்றது கரெக்ட்'' என்று முடித்தார்.
இறுதியாகப் பேசிய ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைமை பேச்சாளருமான ராஜன், 85-ல் மதுரையில் டெசோ மாநாடு நடந்தது. ஆனால் அதில் பிரபாகரன் கலந்து கொள்ளவில்லை. திலகர் என்பவரை அனுப்பினார். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்’ என்று தலைவர் கோரிக்கை வைத்தார்.
ஆனால், மாநாடு முடிந்த சில நாட்களிலேயே மற்ற போராளி இயக்கத்தினரைக் கொன்றுவிட்டார் பிரபாகரன். கொத்துப் புரோட்டாவைப் போல ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள். அதைக் கலைஞர்தான் செய்தார் என்று எத்தனை தி.மு.க-காரன் வெட்டப்பட்டான். இனத்துக்காக பழியை ஏற்றுக்கொண்டோம். இப்போது மிச்சம் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற கலைஞர்தான் இருக்கிறார் என்றார்.
நீங்கள் பேசியதில் உறுதியாக இருக்கிறீர்களா?'' என்று கூட்டம் முடிந்த பிறகு என்.கே.கே.பி. ராஜாவிடம் கேட்டோம்.
நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் எங்கள் தலைவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்கள். அதற்குப் பதிலடி தரவேண்டியது எங்கள் கடமை. கலைஞர் பணம் தந்தபோது வேண்டாம் என்று மறுத்தவர் பிரபாகரன். மற்ற தலைவர்களையும் அங்கு வாழவிடவில்லை அவர். அதனால்தான் இத்தகைய பேரழிவு நடந்தது. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
ராஜாவின் பேச்சு குறித்து ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம்.
ஈரோடு ராஜாவுக்கு கொள்ளை அடிக்கத் தெரியுமே தவிர கடந்த கால வரலாறு தெரிய வாய்ப்பு இல்லை. ஏதோ ஸ்டாலின் தயவால் அமைச்சராகி அதனையும் தக்கவைத்துக்கொள்ளத் தெரியாமல் இழந்துவிட்ட தற்குறி. அறிவார்ந்தவர்கள் இருந்த தி.மு.க., இவரைப் போன்றவர்களைத் தூண்டிவிட்டு கணக்குத் தீர்க்கப்பார்க்கிறது.
ஓர் அப்பாவியைக் கட்டிவைத்து அடித்த கோழைக்கு, ஏழு நாட்டு இராணுவத்தை எதிர்கொண்ட பிரபாகரனைப் பற்றிப் பேசத் தகுதி கிடையாது.
லோக்கல் ஏட்டையாவுக்குப் பயந்துபோய் வெளிமாநிலங்களில் தலைமறைவான மகா கோழைதானே இந்த ராஜா?
தான் சொல்ல முடியாததை ராஜா போன்ற கூஜாக்களின் மூலமாக கருணாநிதி சொல்கிறாரோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.
ராஜாவின் பேச்சை கருணாநிதி ஆதரிக்கிறாரா இல்லையா என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார் சம்பத்.
சூட்டைக் கிளப்பி இருக்கிறது ராஜா பேச்சு. கருணாநிதி என்ன சொல்லப்போகிறார்?
ஜூனியர் விகடன்

ad

ad