தென்னிந்திய நடிகர் சங்கத்தில் டைரக்டர் சற்குணம் மீது நடிகை நஸ்ரியா புகார்
‘‘நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கியிருக்கிறார்’’ என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் செய்து இருக்கிறார்.
புகார்
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘நய்யாண்டி.’ இந்த படத்தில், தனுஷ் ஜோடியாக நஸ்ரியா நடித்து இருக்கிறார். சற்குணம் டைரக்டு செய்திருக்கிறார். கதிரேசன் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த நிலையில், டைரக்டர் சற்குணம் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா ஒரு புகார் கொடுத்து இருக்கிறார். அதில், ‘‘நான் நடிக்க மறுத்த காட்சியில், ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்து படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கி இருக்கிறார்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பேட்டி
இதுபற்றி ‘தினத்தந்தி’ நிருபரிடம் நடிகை நஸ்ரியா கூறியதாவது:–
‘நய்யாண்டி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், கதாநாயகன் என் வயிற்றை தடவுவது போலவும், நான் உணர்ச்சிவசப்படுவது போலவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சற்குணம் என்னிடம் கேட்டார். அந்த காட்சியில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.படப்பிடிப்பு முடிந்து நான் போன பிறகு எனக்கு தெரியாமல், ஒரு ‘டூப்’ நடிகையை அந்த காட்சியில் நடிக்க வைத்து இருக்கிறார்கள். படத்தின் ‘டிரைலரை’ பார்த்தபோதுதான் இதை கண்டுபிடித்தேன். நான் அணிந்திருந்த அதே சேலையை அந்த ‘டூப்’ நடிகை அணிந்திருக்கிறார். அவர் வயிற்றை கதாநாயகன் தடவுவது போலவும், அந்த ‘டூப்’ நடிகை கையினால் ஒரு ‘மைக்’கை பிடிப்பது போலவும் படுகவர்ச்சியாக அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
மன உளைச்சல்
இதுபற்றி டைரக்டர் சற்குணத்திடம் கேட்டபோது, ‘‘அந்த காட்சியில் நீ நடிக்க மறுத்ததால், டூப் நடிகையை நடிக்க வைத்தேன்’’ என்று கூறினார்.கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் எல்லோரும் பார்க்கிற மாதிரி நாகரீகமாகவே நடித்து வருகிறேன். என்னை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.நான் நடிக்காத ஒரு காட்சியில், என் அனுமதி இல்லாமல், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி நான் நடித்தது போல் காட்டுவது, மிகப்பெரிய மோசடி. என்னையும் ஏமாற்றி, ரசிகர்களையும் ஏமாற்றுவது போல் ஆகும். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
நீக்க வேண்டும்
டிரைலரிலேயே இந்த அளவுக்கு ஆபாசமாக இருந்தால், படத்தில் அந்த காட்சி எந்த அளவுக்கு இருக்கும்? என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.‘டூப்’ நடிகையை பயன்படுத்தி எடுத்த அந்த படுகவர்ச்சியான காட்சியை படத்தில் இருந்து நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறேன்.’’இவ்வாறு நஸ்ரியா கூறினார்.