லங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சாட்சியங்களை இலங்கையின் வெளிநாட்டுத் தூதரங்களிலிருந்து வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று ஐ.நா நிபுணர் குழு அதிகாரி ஒருவர் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து இலங்கை அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இலங்கை தொடர்பான மூவரைக் கொண்ட ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினரும், சர்வதே மனித உரிமை சட்டத்தரணியுமான யாஸ்மின் சூகா இந்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களுக்கான சாட்சியங்களை வெளிநாடுகளிலிருந்தே வழங்குவதனை வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு இலங்கை அமைச்சரவை புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இவ்வருடம் மே மாதத்தில் அமுலுக்கு வந்த சாட்சியங்களைப் பாதுகாக்கும் சட்டத்திலே, வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படக்கூடிய சாட்சியங்களையும் ஏற்றுக்கொள்ளும் திருத்தத்தினை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார்.
ஆனாலும், இந்தத் திருத்தத்தின் பிரகாரம் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய சாட்சிக்காரர்கள் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய இலங்கை தூதரகங்களிலேயே இந்தச் சாட்சியங்களை வழங்கவேண்டும் என்றும், சாட்சிக்காரர்கள் வெளியார் தலையீடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக தமது சாட்சியங்களை அங்கிருந்து வீடியோ மூலமாகவோ, ஒலி வடிவத்திலோ வழங்கலாம்.
வெளிநாட்டில் இருக்கக்கூடிய சாட்சியங்களை கலந்துரையாடுவதற்கும், அவர்களின் சாட்சியங்களைப் பெறுவதற்கும் இலங்கை அரசு முன்வந்திருப்பதனை இலங்கைகான உண்மை மற்றும் நீதிக்கான தனது அமைப்பு வரவேற்பதாகவும், ஆனாலும் அவற்றினை இலங்கை தூதரகங்களிலிருந்து வழங்குவது சாட்சியங்களினதும், அவர்களது குடும்பங்களினதும் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாகவும், அபாயமாகவும் அமையும் என்று சூகா தெரிவித்திருக்கிறார்.
நம்பகத்தன்மையான சாட்சிகளுக்கான பாதுகாப்பு என்பது சாட்சிகளைப் பாதுகாப்பாகவும், அநாமதேயமாகவும் தமது சாட்சியங்களை வழங்குவதனை உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவித்துள்ள சூகா, இந்தச் சாட்சியங்கள் சிறிலங்கா தூதரகங்களுக்குச் சென்றால் அவர்கள் இறுதி யுத்தத்தின்போது குற்றங்களைப் புரிந்தவர்களாலேயே அடையாளங் காணப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை