சீன ட்ரோன்களை எச்சரிக்க தைவான் துப்பாக்கி சூடு - அரிதான எதிர்வினை
- பிரான்சஸ் மாவோ
- பிபிசி நியூஸ்
சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரும்பிப் பறந்ததை பார்க்க முடிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய வாரங்களாகவே சீன ட்ரோன்கள் சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள தமது தீவுக் கூட்டங்களுக்கு மேலே பறந்து வருவதாக தைவான் புகார் கூறி வந்தது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது முதல் சீன, தைவான் நீரிணை பகுதிகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.
பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானை ஒட்டிய கடல் பகுதிகளில் தமது படை பலத்தை பெருக்கிய சீனா மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதன் பின்பாக தைவான் கடல் பகுதியில் சீனா ட்ரோன்களை பறக்க விடுவதாக தைவான் கூறியது.
தைவான் தலைவர் சாய் யிங்-வென், "சில ட்ரோன்கள் ராணுவ புறக்காவல் சாவடிகளுக்கு மேல் பறந்தது - ஒரு வகை போர் நடவடிக்கை என்று அழைத்தார்.
சீன நகரமான ஜியாமெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று கின்மென் தீவுகளான தாடன், எர்டான், ஷியு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று சிவிலியன் ட்ரோன்கள் காணப்பட்டதாக கின்மென் பாதுகாப்பு கட்டளை மையம் கூறியது.
இதையடுத்து ஆளில்லா விமானத்தை நேரடியாகச் சுடுவதற்கு முன், எச்சரிக்கும் விதமாக தீப்பொறிகளை பறக்கும் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டதாக தைவான் கூறியது. இதன் பிறகு அந்த ட்ரோன்கள் ஜியாமென்னை நோக்கித் திரும்பின