இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை:தயாராகிறது
அமெரிக்கா! (சிறிலங்கா) இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.