ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் சாட்சியங்களை வழங்க தயாராக உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா இல்லையா என அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் துதுவர மற்றும் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவரை சந்தித்துள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதுள்ளதுடன், அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் சர்வதேச விசாரணையில், இலங்கையை சேர்ந்த எவராவது சாட்சியமளித்தால், அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருந்ததை அடிப்படையாக கொண்டே, கூட்டமைப்பு, அமெரிக்காவிடம் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள கருத்து வெளியிடும் உரிமை இருக்க வேண்டும் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்