பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.
இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.
இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இரு இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
அவர்களில் ஒருவர் விக்கெட்டுக்களுக்கு அருகே வரை ஓடிவிட்டார்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது இது நடந்தது. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.