புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை! கலைஞர் கடிதம்!

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! (8) என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் 12.05.2014 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள
அறிக்கையில்,

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவர்கள், சாட்சியங்களின் மூலம் வெளிவந்த விபரங்களை, மேலும் தொடர்ந்து தொகுத்துக் கூறினார்.

தமிழக வீட்டு வசதிக் கழகச் செயலாளர் பாலகிருஷ் ணன் ஐ.ஏ.எஸ்., கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கில் மூன்றாவது குற்றவாளியான வி.என். சுதாகரன் மற்றும் நான்காவது குற்றவாளியான இளவரசி ஆகியோருக்கு; முதல் குற்றவாளியான ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, தமிழக வீட்டு வசதிக் கழக விதிமுறை களை மீறி, இருவருடைய ஆண்டு வருமானம் பல லட்சம் ரூபாயாக இருந்தும், தலா ரூ.48 ஆயிரம் என்று போலி வருமானச் சான்றிதழ் பெற்று இருவருக்கும் தலா ஆயிரத்து 800 சதுரஅடி வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளதை ஆதாரங்களுடன் விளக்கி வாதிட்டார். 
பல்வேறு நிறுவனங்களின் பெயரில் ஜெயலலிதாவும், அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரும் வங்கியில் கணக்குகள் வைத்திருந்தது தொடர்பாகவும், அந்த நிறுவனங்களுக்கிடையே முறைகேடாகப் பணப் பரிமாற்றங்கள் செய்தது குறித்தும் இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் அளித்த சாட்சியத்தை அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனி நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைத்தார். அப்போது சென்னை அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் மேலாளர் மாணிக்கவாசகம் அளித்திருந்த சாட்சியத் தில், “வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்டு இயங்கி வரும் ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா ரியல் எஸ்டேட் கம்பெனி, ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெயா பைனான்ஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ராமராஜ் ஆக்ரோ மில்ஸ், கோபால் பிரமோட்டர்ஸ், ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெயா ஹவுசிங் டெவலப்மெண்ட், லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், மெட்டல்கிங் அப்பார்ட்மெண்ட் உள்பட பல நிறுவனங்கள் பெயரில் எங்கள் வங்கியில் தனித்தனியாக கணக்குகள் தொடங்கப்பட்டன. அதில் கடந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை அனைத்துக் கம்பெனிகளின் கணக்கு எண்ணிலும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. 
பணப் பரிமாற்றத்தின் போது காசோலையாகக் கொடுக்கப்பட்ட தில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனியின் வங்கிக் கணக்கிலும் பணப் பரிமாற்றம் நடந்தது. மேலும் கம்பெனிகளுக்குத் தேவையான நிலம், இயந்திரம், கட்டிடம் ஆகியவை வாங்குவதற்காகக் கடனும் பெறப்பட்டுள்ளது. கடன் பத்திரங்களிலும் பங்குதாரர்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர்” என்று சொன்னதையும்;

எந்தெந்தத் தேதியில் பணப் பரிமாற்றம் நடந்தது, எந்தெந்தத் தேதியில் வங்கியில் கடன் பெறப்பட்டது, கம்பெனிகளின் முகவரி யார் வீட்டு விலாசத்தில் உள்ளது என்பன உள்பட பல தகவல்கள் குறித்துப் புள்ளி விவரங்களுடன் மாணிக்கவாசகம் சாட்சியம் அளித்துள்ளதையும் பவானி சிங் விளக்கினார். 
மெடோ ஆக்ரோ பார்ம் நிறுவனத்திற்குத் தேவையான நிலம் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோரிடம் மெடோ ஆக்ரோ பார்ம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். தியாகராஜன் வாக்குமூலம் தந்தார். அதைத் தொடர்ந்து ரிவர்வே ஆக்ரோ பார்ம் நிறுவனத் தின் இயக்குனர் குமாரிடம் வழக்கறிஞர் ஆர்.தியாக ராஜன் விசாரணை நடத்தியபோது, ரிவர்வே ஆக்ரோ பார்ம் நிறுவனத்திற்காக 10.9.1994 அன்று ஜெயக்கொடி என்பவருக்குச் சொந்தமான நிலத்தை சிவா என்ற ரியல் எஸ்டேட் முகவர் மூலம் வாங்கியதாகத் தெரிவித்தார். 
மேலும் 21.12.1996 அன்று வீரபத்ரம் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், முத்து நாடார் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், சாமுவேல் நாடார் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், ரவி குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், முத்துபாண்டியன் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், மந்திரம் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், கிருஷ்ணன் கோனார் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், பத்மநாப ரெட்டியார் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் ஆகிய நிலங்கள் அனைத்தையும்; 17.2.1992 அன்று துரை, கண்டசி நாடார் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத் தையும்; 18.8.1994 அன்று ராஜா நாடார், சண்முகம் நாடார், பேரின்ப நாடார், சண்முகசுந்தரம் நாடார் ஆகியோர் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களையும்; சிவா என்ற நிலமுகவர் மூலம் வாங்கிப் பதிவு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் போன்றவை இணைக்கப்பட்டு, அவை குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் சொத்தாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கம்பெனிகள் சார்பில் கடந்த மார்ச் திங்களில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் “வழக்கில் இருந்து இந்த நிறுவனங்களை விடுவிக்கவேண்டும். மேலும் இது தொடர்பாக நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணை நடத்தி முடிவு காணும் வரை மூல வழக்கை விசாரிக்காமல் தடைவிதிக்க வேண்டும்” என்று சிறப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 
அம்மனுவை விசாரணை நடத்திய நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா, “சொத்துக் குவிப்பு வழக்கில் கம்பெனிகள் இணைக்கப்பட்டுள்ளதை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு அனுமதிக்கிறேன். ஆனால், மூல வழக்கு விசாரணையை நடத்தத் தடை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று தீர்ப்பளித்தார். 
மேலும் மூல வழக்கிற்குத் தடைவிதிக்கக் கோரியதற் குக் கண்டனம் தெரிவித்து, “நீதிமன்ற நேரத்தை வீணாக் கியதற்காக” ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மார்ச் 14ஆம் தேதி தீர்ப்பளித்தார்.தனி நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பை எதிர்த்து லெக்ஸ் பிராபர்ட்டீஸ் கம்பெனி சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி சத்யநாராயணா முன் 29.4.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணா அவர்கள், அம்மனுவின் மீது அளித்த தீர்ப்பு வருமாறு:- 
“சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உச்சநீதி மன்ற வழிகாட்டு தலின்படி பெங்களூரில் தனிநீதிமன்றம் அமைக்கப் பட்டது. வழக்கு விசாரணையினை தினமும் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் பல மனுக்கள் போடப்படுகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து லெக்ஸ் கம்பெனியை விடுவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்புடைய தல்ல. ஆகவே மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.மேலும் நீதிமன்ற நேரத்தை வீணாக்கும் வகையில் செயல்பட்ட தற்காக தனி நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்திருந்தது. அது குறைவானது என்பதால் 10 மடங்கு உயர்த்தி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதத் தொகையை வரும் 15 நாட்களில் செலுத்த வேண்டும்”. - இவ்வாறு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணா அவர்கள் தீர்ப்பளித்தார். இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால், இதே லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தினர் ஏற்கனவே ஒரு முறை தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து, அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதுதான். 
லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.அதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சௌகான், செல்லமேஷ்வர், இக்பால் ஆகியோர், சொத்துக் குவிப்பு விசாரணைக்குத் தடை விதிக்குமாறு லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை நிராகரிப்பதாக 8-5-2014 அன்று தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையைத் தடுத்திடும் வகையில் செயல்படு வதாக அந்த நிறுவனத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 
லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தைப் போலவே, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மெடோ ஆக்ரோ பார்ம் மற்றும் ரிவர்வே ஆக்ரோ பார்ம் ஆகிய கம்பெனிகளை விடுவிக்க வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை விசாரணை நடத்த வேண்டும், அதுவரை மூல வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டுமென்று அந்தக் கம்பெனிகள் சார்பில் தனித்தனியாக மனுக்கள், விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி குன்ஹா, மூல வழக்கிற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததுடன் நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக இரண்டு கம்பெனிகளுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். 
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் சொத்து முடக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக சில கேள்விகளை நீதிபதி கேட்டார். 
அப்போது, “சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை விசாரிக்க அமைக்கப்பட்ட சென்னை தனி நீதிமன்றத்தில் நீங்கள் கடந்த 1998ஆம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தீர்கள். அதில் வழக்கு காலத்தில் தமிழக லஞ்ச - ஒழிப்புப் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கில் சான்றுப் பொருளாகச் சேர்த்து முடக்கி வைத்துள்ள அசையும் சொத்துகளை வாபஸ் வழங்கக் கேட்டிருந் தீர்கள். 
உங்கள் மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம், உங்கள் கோரிக்கையை நிராகரித்து 2000ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தீர்கள். அந்த மனு மீது கடந்த 2ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் சொத்துக்களை முடக்கம் செய்து தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன், சொத்து முடக்கம் தொடர்பான வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 
அதற்குப் பதிலளித்த சசிகலா, “நாங்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் முழு விவரம் எனக்குத் தெரியவில்லை” என்றார். மேலும் நீதிபதி, “கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அரசு வழக்கறிஞர் இந்த நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் வழக்கில் சான்றுப் பொருளாகச் சேர்க்கப்பட்டிருந்த ஆயிரத்து 116 கிலோ வெள்ளிப் பொருட்களை பெங்களூர் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார். அரசு வழக்கறிஞரின் மனு மீது பதில் மனு தாக்கல் செய்தபோது, சொத்து முடக்கம் செய்துள்ளதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உங்கள் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதை ஏன் இந்த நீதிமன்றத் தில் உங்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை?” என்று நீதிபதி கேட்டதற்கு, “தெரியாது” என்று பதிலளித்தார். 
“இதுகுறித்து உங்களுக்குத் தெரியுமா?” என்று அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்து நீதிபதி கேட்டார். அவரும் தனக்குத் தெரியாது என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து தமிழக லஞ்ச - ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சம்மந்தத்திடம் நீதிபதி சில கேள்விகளை எழுப்பினார். 

“2006ஆம் ஆண்டு இதே வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயபால் அவர்கள் சொன்ன அதே கருத்தை கடந்த 2011ஆம் ஆண்டும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகநாதனும் தெரிவித் திருந்தார். இந்த உண்மை உங்களுக்குத் தெரிந்திருந்தும், குற்றவாளிகள் தரப்பில் சொத்து முடக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது தனியாக ஒரு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்தது ஏன்? அந்த மனு தொடர்பாக விவரங் களை இந்த நீதிமன்றத்தில் ஆஜராகும் கர்நாடக அரசு வழக்கறிஞரிடம் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சசிகலா, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளதாகப் பதிலளித்தார். 
தமிழக அரசின் வருவாய்த் துறை இணை ஆணையர் தியாகராஜன் கொடுத்துள்ள சாட்சியத்தில், ஊத்துக் கோட்டை, அதிலிவாக்கம் கிராமத்தில் வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெயரில் 220 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு விளையும் பழத்தைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தனியாக பதப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தில் வழக்கில் 2வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு 40 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் மாமரம் பயிரிட்டுள்ளனர். இந்த நிலங் களின் மதிப்பு பல லட்சம் என்று சாட்சியம் அளித் துள்ளதைப் படித்துக் காட்டினார். 
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்து வாதிடும் போது, “சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கம்பெனிகளை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை முதலில் விசாரணை நடத்த முன்னுரிமை கொடுப்பதுடன், மூல வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்து கம்பெனிகள் தொடர்பாக வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக வைத்து முதலில் கம்பெனிகள் தொடர்பான மனுவை விசாரணை நடத்த வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கில் கம்பெனிகள் யாருக்குச் சொந்தம் என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, எங்கள் கட்சிக்காரர் மீது சுமத்தியுள்ள குற்றங் களை நாங்கள் இல்லை என்று நிரூபிக்க முடியும்” என்றார். 
இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபால் முன்னிலையில் ஒரு மனு விசாரணைக்கு வந்தபோது, “சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக எந்த மனு மீதான விசாரணை, எந்த நீதிமன்றத்தில் நடந்தாலும், இவ் வழக்கு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற சிபாரிசின் பேரில், கர்நாடக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு வழக்கறிஞரின் கவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமில்லாமல், அவர் மட்டுமே ஆஜராகி வாதிடும் உரிமை பெற்றுள்ளார்” என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். 
மேலும் இதே வழக்கின் மற்றொரு மனு கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, “சொத்துக் குவிப்பு வழக்கை விசாரணை நடத்திவரும் பெங்களூர் தனி நீதிமன்றத்தின் முடிவில் தலையிட முடியாது” என்று தீர்ப்பளித்துள்ளார்.

“சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக 2006ஆம் ஆண்டு நீதிபதி ஜெயபால் மற்றும் 2013ம் ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும் போது, நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கியுள்ள தீர்ப்பு எந்த வகையிலும் பெங்களூர் தனி நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்காமல் நிராகரிக்க வேண்டும்” என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் சார்பில் வழக்கறிஞர் முருகேஷ் மரடி வாதிட்டார். 
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கம்பெனிகளை விடுவிக்கக் கோரும் மனுவின் மீது நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா 7-5-2014 அன்று வழங்கிய தீர்ப்பில், “அந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு அனுமதிக்கப்பட் டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை முடியும் வரை மூல வழக்கின்மீது விசாரணை நடத்தாமல் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்க முடியாது. ஒரேநேரத்தில் இரு வழக்குகளும் நடைபெறும். மூல வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன், கம்பெனிகள் தொடர்பான மனுமீது தீர்ப்பு வழங்கப்படும்” என்று தெளிவுபடுத்தினார். 
சிறப்பு நீதிமன்றத்தில் 2500 பக்கங்கள் கொண்ட வழக்கின் சாட்சி ஆவணங்களைத் தொகுத்துக் கூறுகையில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்,

‘‘குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் சொத்துக் குவித்துள்ளதற்கான ஆதாரங்களை 2 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட ஆவணமாகத் தொகுத்து வழங்குகிறேன். வழக்கு தொடங்குவதற்கு முன் குற்றவாளிகளுக்கு 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இது, வழக்கு காலத்தில் 306 சொத்து களாக உயர்ந்துள்ளது. அதில், 289 சொத்துகள் பல வழிகளில் வருமானத்திற்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை என்பதற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. 

குறிப்பாக, வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட் டுள்ளவர்களின் பொருளாதார நிலை, வழக்கு காலத்திற்கு முன்பு இருந்ததற்கும், வழக்கு காலத்தில் உயர்ந் துள்ளதற்கும் சம்மந்தமில்லாத வகையில் உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலம் அனைத்தும் உண்மை! அவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’ என்று பவானி சிங் வலியுறுத்தினார். 
இதோ பவானி சிங் அவர்கள்தான் வழக்கு விசாரணையை இழுத்தடிக்க பல வழிகளிலும் முயன்றார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. ஜெயலலிதா இவ்வாறு ஊழல் வழக்கில் சிக்கி ஆண்டுக் கணக்கிலே வாய்தா வாங்கி, அதன் மூலமாகத் தப்பித்துக் கொண்டு வருவது இந்த ஒரு வழக்கிலே மாத்திரமல்ல; வேறு சில வழக்குகளிலும் இதே நிலைதான்! ஆண்டுக் கணக்கிலே அந்த வழக்கு களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகின்றன. 
இந்த நிகழ்வுகளையெல்லாம் மனதிலே கொண்டு தான் 17-4-2014 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “நாங்கள் வந்தால்தான் நீங்கள் வழக்கை நடத்தவேண்டும்; வராவிட்டால் ஒத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு நடப்பது ஜெயலலிதா ராஜ்யமா? அல்லது நீதியின் ராஜ்யமா?” என்ற முக்கியமான வினாவினை எழுப்பியிருந்தேன். 
அவர்களுக்கு இருக்கும் மன தைரியமெல்லாம், “நாம் எத்தனை கோடிக்குச் சொத்துக்களைக் குவித்தாலும், நீதிமன்றத்தில் வாய்தாக்களைப் பெற்று, வரம்பின்றி இழுத்தடித்து, எத்தனை ஆண்டுகளை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின்படி கழித்து விடலாம்; மக்களோ நாம் எதைச் செய்தாலும், நம்மை நம்பி, வாக்களிக்கிறார்கள்” என்பதுதான்! இதுதான் சொத்துக் குவிப்பு வழக்கின் பதினாறு ஆண்டுக் கால வரலாறு! இந்த வழக்கின் தீர்ப்பைத்தான் தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது; இந்தியா முழுதும் உள்ள வழக்கறிஞர்களும், நீதித்துறை ஆர்வலர்களும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பு வரக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை! பார்வையை மறைத்திடும் பனித்திரை விலகியே தீரும்! உண்மையை உலகம் உணரும்! 

ad

ad