புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

 மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழக-இலங்கை மீனவர்களிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழக மீனவர்கள், மற்றும் அதிகாரிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை கொழும்பு சென்றனர்.


 பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களை சிறை வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்ட சூழலில், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டால் மட்டுமே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று தமிழகத்தின் தரப்பில் உறுதியாக எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர் பிரதிநிதிகள் 13 பேரும், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 9 பேரும் பங்கேற்றுள்ளனர். இலங்கை சார்பில், மீனவர் பிரதிநிதிகள் 20 பேரும், அதிகாரிகள் 10 பேரும் பங்கேற்றுள்ளனர்.

தமிழக மீனவர்களை பாரம்பரியமான பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும், மீனவர்கள் கைது நடவடிக்கை கூடாது, தாக்குதல்கள் கூடாது என்பன போன்ற கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் இலங்கையிடம் முன்வைக்கப்படுகின்றன.

இதேபோல், இழு வலைகள், இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை தமிழக மீனவர்களுக்கு இலங்கை தரப்பு முன்வைக்கிறது.

இன்றும், நாளையும் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், இரு தரப்பினரின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்வு காணப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad