வெள்ளி, அக்டோபர் 30, 2015

ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதும் விசாரணை நடத்தப்படவில்லை மஹிந்த விசனம்


ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் நேற்று மஹிந்த ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார்.
சட்டத்தரணிகளுடன் அவர் நேற்று முற்பகல் 10.00 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு காரியாலயத்திற்கு சென்றிருந்தார்.
எனினும், ஏழு மணித்தியாலங்கள் அங்கு காத்திருந்த போதிலும் வாக்கு மூலம் எதுவும் பதியப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நானும் எனது சட்டத்தரணிகளும் இன்று முழு நாளும் இங்கு காத்திருந்தோம்.
எனதும் எனது சட்டத்தரணிகளினதம் கால நேரம் விரயமாகியது.
இது மிகப் பெரிய உளவியல் பாதிப்பாகும். தொடர்ச்சியாக இவ்வாறுசெய்வது என்னிடம் பழிவாங்கும் நோக்கிலாகும்.
வெறுமனே எனது காலத்தை விரயமாக்குகின்றனர்.
இப்போது இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நான் செய்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அல்ல விசாரணை நடத்தப்படுகின்றது.
என்னுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது.
எனினும் நான் தொடர்ச்சியாக ஆணைக்குழு எதிரில் பிரசன்னமாகின்றேன்.
பிரச்சனை என்னவென்றால் எனது கால நேரம் விரயமாகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று விசாரணைக்குழுவின் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், வெளியேறிய போது அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.