புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2018

மெண்டிஸ் நிறுவனம் வழங்கிய 102 காசோலைகளின் பற்றுச்சீட்டுகள் அழிப்பு


மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ள பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனம் மூன்றாம் தரப்புக்கு வழங்கியுள்ள சந்தேகத்துக்கு இடமான 102 காசோலைகளுக்கான பற்றுச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளன.


பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகள் நடைபெறும் போது, மெண்டிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரின் உத்தரவுக்கு அமைய, அந் நிறுவனத்தின் நிர்வாக குழு அறையில் இந்த பற்றுச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்,

அழிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களுக்கு பதிலாக போலி பற்றுச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டு கொடுக்கல் வாங்கல்கள் குறித்த கோவைகளுக்குள் புகுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் யசந்த கோதாகொட நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார்.

மெண்டிஸ் நிறுவனத்தின் நிதிப் பிரிவின் மூன்று அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியுள்ள ஒப்புதல் வாக்கு மூலம் ஊடாக இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

இதன்போது மன்றில் விசாரணையாளர்கள் சார்பில், குற்றப் புலனாயவுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் அம்பாவல, குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணை அதிகாரியுமான பெண் பொலிஸ் பரிசோதகர் தர்மலதா சஞ்ஜீவனீ, கனிணிக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, உப பொலிஸ் பரிசோதகர் விமல் ஜயவீர ஆஜராகினர்.

அவர்களுடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் யசந்த கோதாகொட, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, சிரேஷ்ட சட்டவாதி லக்மினி ஹிரியாகம, அரச சட்டவாதிகளான உதார கருணாரத்ன, சத்துரி விஜேசூரிய ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

2 ஆம் சந்தேக நபரான அர்ஜுன் அலோசியஸ், மூன்றாம் சந்தேக நபரான பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வாவும், 4 ஆம் சந்தேக நபரான கசுன் பலிசேன சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலகவும் ஆஜராகினர். டம்பிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி கோலித்த குணவர்த்தன ஆஜராகினார்.

இதன்போது மன்றில் மேலதிக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொடவினால் விஷேட விடயங்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.

இதன்போது மன்றில் குறித்து தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட பின்வருமாறு மன்றில் தெரிவித்தார்,

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நாம் டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனத்துக்கு அவர்களது கணினி வலையமைப்பை சோதனை செய்து அதன் ' ' பிரதியைப் பெற்றுக்கொள்ள சென்றோம். அப்போது குற்றப் புலனாயவுப் பிரிவினர் கணினி நிபுணர்களுக்கு மெண்டிஸ் நிறுவனத்தின் சஜித் களுபத்திரன எனும் அதிகாரியால் அந் நடவடிக்கையை முன்னெடுக்க தடை ஏற்படுத்தப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

இது நீதிமன்றை அவமதிக்கும் செயலாகும். நாம் நீதிமன்ற கட்டளையை அமுல் செய்யவே சென்றோம். எமக்கு அதற்கு அனுமதிக்காமை மன்றை அவமதிக்கும் செயலாகும். அத்துடன் அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தண்டனை சட்டக் கோவையின் 183 ஆவது அத்தியாயத்தின் படி தண்டனைக்குறிய குற்றமாகும். அது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு கவனம் செலுத்தும்.

எனினும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் இந்நீதிமன்றம் ஆராய வேண்டும். அவர்கள் அவ்வாறு கணினி வலையமைப்பை சோதனை செய்ய அனுமதிக்காமைக்கு காரணம் உள்ளது. டப்ளியூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் நிதியியல் சார்ந்த அதிகாரிகளான சுஜித் அல்விஸ், புத்தி சங்கல்ப பெரேரா மற்றும் சிவசுந்தர்ம் ஹரிசன் ஆகியோர் சி.ஐ.டி.க்கு ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

அதில், பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற காலப்பகுதியில், அதாவது 2017 நவம்பர் மாதத்தில் ஒரு நாள், மெண்டிஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளரின் உத்தரவுக்கு அமைய காசோலைகள் தொடர்பிலான பற்றுச்சீட்டு பல அழிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மெண்டிஸ் நிறுவனம், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் சார்பில் மூன்றாம் தரப்புக்கு வழங்கியதாக நம்பப்படும் 102 கசசோலைகள் குறித்த பற்றுச்சீட்டுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

அன்றைய தினம் மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை அந் நிறுவனத்தின் நிர்வாக குழு அறையில் இந்தபற்றுச்சீட்டுகள் அழிக்கப்பட்டு, அது தொடர்பிலான காசோலைகளுக்காக புதிய போலி பற்றுச்சீட்டு தயாரிக்கப்பட்டு அவை உரிய பெட்டிக் கோவைகளுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களையே அந் நிறுவனம் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு கையளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி டப்ளியூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் நிதியியல் சார்ந்த அதிகாரிகளான சுஜித் அல்விஸ், புத்தி சங்கல்ப பெரேரா மற்றும் சிவசுந்தர்ம் ஹரிசன் ஆகியோர் சி.ஐ.டி.க்கு வழங்கியுள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தில் இவற்றை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அதில் சுஜித் அல்விஸ் தனது வககு மூலத்தில் அழிக்கப்பட்ட வவுச்சர்களில் உள்ளடங்கும் 7 வவுச்சர்கள் குறித்த தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந் நிலையில் இவை குறித்து பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது. காசோலைகள் யாருக்கு என்ன தேவைக்காக வழங்கப்பட்டது என்பதை வெளிப்படுத்த அழிக்கப்பட்ட வவுச்சர்களின் விபரங்களை வெளிப்படுத்த வேண்டும். அந் நிறுவனத்தின் கணினி வலையமைப்பு கட்டமைப்பை சோதனைச் செய்து அதன் பிரதியைப் பெறுவதன் ஊடாக இது சாத்தியமாகலாம் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மெண்டிஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த குற்றச்சாட்டை மறுத்தார். பிரதிகளை எடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் லங்கா ஜயரத்ன, சந்தேக நபர்களான அலோசியஸ், பலிசேனவை எதிர்வரும் 27 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ad

ad