புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை கவர்னர் மாளிகை மறுப்பு



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது.

ஆனால், அதற்கு அனுமதி மறுத்த மத்திய அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த 6-ந் தேதி அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், சிறையில் இருக்கும் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக இந்த தீர்மானம் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த 11-ந் தேதி இந்த 7 பேர் தொடர்பான கோப்புகளையும் கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக சட்ட நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் சிலர், இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் கவர்னர் கலந்து ஆலோசித்துத்தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினார்கள்.

தமிழக அரசின் பரிந்துரை குறித்து சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வந்தார். இதனால் அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு பரிந்துரைத்து இருப்பது பற்றி உள்துறை அமைச்சகத்தின் கருத்தை அவர் கேட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

கவர்னரின் இந்த நடவடிக்கையால் 7 பேர் விடுதலை ஆவது மேலும் தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த நிலையில் கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் 7 பேர் விடுதலை மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை என கூறப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

ad

ad