வியாழன், பிப்ரவரி 28, 2019

இந்தியா போரை தொடர விரும்பவில்லை - உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு


இந்தியா மேலும் தொடர்ந்து போரிடுவதை விரும்பவில்லை. இந்தியா தொடர்ந்து பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படும் என வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இந்தியா போரை தொடர விரும்பவில்லை - உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
புதுடெல்லி:

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும், ராணுவ நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதேபோல கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டர்ரெஸ், “இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தொடரும் நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு மேலும் நிலைமை மோசமடையாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த கோரிக்கைகளை ஏற்று வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறும்போது, “இது பாகிஸ்தான் ராணுவத்தின் மீதான தாக்குதல் அல்ல. எந்த ராணுவ நிலைகளும் தாக்கப்படவில்லை. இது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான வான் தாக்குதல். இப்போதுள்ள நிலைமையில் இந்தியா மேலும் தொடர்ந்து போரிடுவதை விரும்பவில்லை. இந்தியா தொடர்ந்து பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படும்” என்றார்.