செவ்வாய், ஆகஸ்ட் 06, 2019

ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும் தொலைபேசி சிம் அட்டை அவருடைய தந்தையின் பெயரில் உள்ளமையால் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக இன்று(06) கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை கிளிநொச்சி அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது

வழங்கப்பட்டுள்ள அழைப்பானையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பாக தங்களிடம் வாக்குமூலம் பெற வேண்டி இருப்பதால் ஆறாம் திகதி ஒன்பது மணியளவில் இரண்டாம் மாடி புதிய செயலகக் கட்டிடம் கொழும்பு ஒன்று எனும் விலாசத்தில் அமைந்துள்ள விசாரணைப்பிரிவு ஒன்றின் அதிகாரியை சந்திக்குமாறு கோரப்பட்டுள்ளது

இது தொடர்பில் இன்று கொழும்பு சென்ற போதே குறித்த ஊடகவியலாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.